இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாட்டிறைச்சியை ஆய்வகத்தில் தயாரித்து அசத்தியது இஸ்ரேலைச் சேர்ந்த அலெப் பார்ம்ஸ். அசல் மாட்டின் செல்களை எடுத்து, ஆய்வகத்தில், இறைச்சியாகவே நேரடியாக வளர்க்கும் முறையை அலெப்ஸ் பார்ம்ஸ் கண்டுபிடித்திருந்தது.
இந்த இறைச்சியை சமைத்து, கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுபவருக்கு, அசல் மாட்டிறைச்சியைப் போலவே சுவை, மணம் ஆகியவற்றைத் தந்தது.ஆனால், 'தசைப் பிடிப்பு' இல்லாததால், மாட்டிறைச்சித் துண்டு வடிவத்தில் அது இருக்கவில்லை.. மேலும், வாயில் மெல்லுகையில், மாட்டிறைச்சியை மெல்லுவது போன்ற உணர்வும் கிடைக்கவில்லை.இதை பல உணவு விமர்சகர்கள் அப்போதே சுட்டிக்காட்டினர். எனவே, அலெப் பார்மசின் விஞ்ஞானிகள் தங்கள் செல் வளர்ப்பு மாட்டிறைச்சிக்கு, திடமான வடிவத்தைத் தர, ஒரு புதுமைத் தொழில்நுட்பத்தை நாடினர்.
முப்பரிமாண அச்சியந்திரத்தின் ஒரு வகையான 'உயிரி' அச்சியந்திரத்தில், மாட்டிறைச்சி செல்களை செலுத்தி, அசல் மாட்டுக்கறி துண்டு போன்ற வடிவத்தில் அச்சிடச் செய்தனர் அலெப் பார்ம்ஸ் விஞ்ஞானிகள். பல மாத முயற்சிகளுக்குப் பின், அவர்களே ஒரு உயிரி அச்சு முறையை உருவாக்கியிருப்பதாக அலெப் பார்ம்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அச்சு முறையில் உருவான மாட்டிறைச்சித் துண்டு அசல் மாட்டி றைச்சி போலவே இருப்பதுடன்,மெல்லுவதற்கும் ருசியாக இருப்பதாக அலெப் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மாடுகளைக் கொல்லாமல், அசல் மாட்டிறைச்சித் துண்டு போலவே, ஆய்வுக்கூடத்தில் தயாரிக்க முடிவது ஒரு சாதனைதான்.எனவே அலெப் பார்ம்சின் கண்டுபிடிப்பிற்கு, மேற்குலக நாடுகளில் நல்ல மவுசு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE