மும்பை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்புபவர்களை தேச துரோகிகளாக சித்தரிப்பதா? என சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‛எரிபொருள் விலை அதிகரித்ததன் முக்கிய காரணம் முந்தைய அரசுகள் தான். எரிபொருள் தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்து இருப்பதை அந்த அரசுகள் குறைக்க நடவடிக்கை எடுக்காததால் தற்போது சாமானிய மக்கள் சிரமப்படுகிறார்கள்,' எனக் கூறினார்.

இந்நிலையில் சிவசேனா எம்.பி.,யும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் கூறியதாவது: பெட்ரோல் விலை உயர்வின் மூலம் மேற்குவங்க பிரசாரத்திற்கு செல்கிறதா? எரிபொருள் விலை உயர்வுக்கு முந்தைய அரசே பொறுப்பு என மத்திய அரசு மீண்டும் மீண்டும் கூறுகிறது. 7 ஆண்டுகளாக முழு பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் பணவீக்கம், ஊழல், தேசிய பாதுகாப்பு தொடர்பான உள்ளிட்ட எந்தவொரு கேள்வியை எழுப்பினாலும் இதே பதிலைத் தான் மத்திய அரசு தெரிவிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்புபவர்களை தேச துரோகிகளாக சித்தரிப்பதா?. இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் பொய் கூறியுள்ளார்
சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, சீனப் படைகள் இந்திய எல்லையில் ஊடுருவவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி வந்தார். அவரே தற்போது சீன துருப்புக்கள் நம் மண்ணிலிருந்து பின்வாங்குவதாகக் கூறுகிறார். அப்படி என்றால் சீனப் படைகள் ஊடுருவியுள்ளது. நம் பிரதமர் பொய் சொல்லி இருக்கிறார்.
சீன துருப்புக்கள் பின்வாங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது பாதுகாப்பு அமைச்சகத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி. ஆனால் சீன ஊடுருவல் குறித்து அரசாங்கம் ஏன் பொய் சொன்னது? எதிர்க்கட்சிகள் ஊடுருவல் பற்றி கேள்வி எழுப்பிய போது பிரதமரும், பிற மூத்த அமைச்சர்கள் பொய் சொன்னார்கள். தற்போது அனைத்தும் தெளிவாகிவிட்டன. படைகள் வாபஸ் குறித்து தற்போது அரசே கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.