புதுடில்லி : 'முன்னாள் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதில் மிகப் பெரிய சதி நடந்தது என்பதை மறுக்க முடியாது' எனக் கூறிய உச்ச நீதிமன்றம், அந்த விசாரணையை முடித்து வைத்தது.
குற்றச்சாட்டு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவி வகித்தபோது, அங்கு பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அவர் மீது பாலியல் ரீதியாக குற்றம் சாட்டினார். இந்த புகார் குறித்து, தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும், எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.'ரஞ்சன் கோகோய் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் ஆதாரமில்லை' எனக் கூறி, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
இதற்கிடையே, வழக்கறிஞர் ஒருவர், 2019ல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: ரஞ்சன் கோகோய்க்கு எதிராக சதி நடக்கிறது. தீர்ப்புகள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதில் மிகப் பெரும் சதி நடந்துள்ளது. இது பற்றி விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், கோகோய் மீது கூறப்பட்ட புகாரில் அடங்கிய சதி பற்றி விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி, ஏ.கே.பட்நாயக் தலைமையில் குழு அமைத்தது. 'வாட்ஸ் ஆப்' இந்தக் குழு, இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தியும், கோகோய்க்கு எதிராக நடந்த சதியில், 'வாட்ஸ் ஆப்' தகவல்கள் உட்பட எந்த மின்னணு ஆவணங்களையும் கைப்பற்ற முடியவில்லை.
இது குறித்து பட்நாயக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'என்.ஆர்.சி., எனப்படும், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் உட்பட பல முக்கிய வழக்குகளில், தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருந்தபோது, சில கடினமான முடிவுகளை எடுத்துஉள்ளார். இதனால், அவரை பதவியிலிருந்து விலக வைக்க, சதிகள் நடந்துள்ளன' என, உளவுத் துறை தெரிவித்தது. சதி நடந்தது உண்மை என்றாலும், அதற்கான ஆவணங்களை எங்களால் கைப்பற்ற முடியவில்லை.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சஞ்சய் கவுல் தலைமையிலான, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்நாயக் தலைமையிலான குழு விசாரணை நடத்தியதில், எந்தவிதமான மின்னணு ஆவணங்களையும் கைப்பற்ற முடியவில்லை.
அர்த்தமில்லை
ஆனால், ரஞ்சன் கோகோய்க்கு எதிராக, பெரிய அளவில் சதி நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது என, பட்நாயக் தெரிவித்துள்ளார். இனியும் விசாரணை நடத்துவதில் அர்த்தமில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணையை முடித்து வைக்கிறோம்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE