புதுடில்லி : 'டூல்கிட்' வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை, ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கக்கோரி, திஷா ரவி தாக்கல் செய்த மனுவை, நேற்று விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையத்திற்கு, 'நோட்டீஸ்' அனுப்பி வைத்தது.
போராட்டம்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க், 'டுவிட்டர்' வாயிலாக பதிவுகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட, 'டூல்கிட்' எனப்படும், போராட்டம் தொடர்பான தகவல் தொகுப்பு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வன்முறையை துாண்டும் வகையிலான அந்த டூல்கிட்டை, காலிஸ்தான் அமைப்பின் உதவியுடன் உருவாக்கியதாக கூறி, சமீபத்தில், கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்த, சுற்றுச்சூழல் ஆர்வலரான, திஷா ரவி, 21, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றத்தில், திஷா ரவி நேற்று முறையிட்டார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வழக்கு விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட தகவல்களை, ஊடகங்களிடம் போலீசார் வெளியிடுகின்றனர்.
அது விசாரணையை சீர்குலைத்துவிடும். தனியுரிமைசில ஊடகங்கள், என் தனிப்பட்ட 'வாட்ஸ் ஆப்' உரையாடல்களை பகிர்ந்துள்ளன. இது, என் தனியுரிமையை பறிக்கும் செயல். எனவே, இந்த வழக்கு தொடர்பான விபரங்களை வெளியிட, போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி பிரதிபா சிங் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பதிலளிக்கக்கோரி, என்.பி.எஸ்.ஏ., எனப்படும் செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம் மற்றும், இரண்டு ஊடகங்களுக்கும், உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பி வைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE