உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
பா.சி.ராமச்சந்திரன், மூத்த பத்திரிகையாளர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரைத் தான், தமிழர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என, திராவிட ஆட்சியாளர்கள் திட்டமிட்டு செயல் படுகின்றனர். அடுத்ததாக சசிகலா, ஸ்டாலின் போன்றோரையும், தமிழகத்தில் முன்னிலைப்படுத்துவர். சுதந்திரத்திற்காகப் போராடி சிறை சென்ற, உயிரிழந்த தியாகிகள் அனைவரையும் மறைத்துவிட்டனர்.
உலகச் சரித்திரம் பேசும், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு பிரபாகரன், சேகுவேரா, மார்டின் லுாதர் கிங் என எல்லாரையும் தெரியும். ஆனால், 1932ல் வெள்ளைக்காரன் கண்ணில் மண்ணை துாவி, செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொடிமரத்தில் இந்திய கொடியை, 160 அடி உயரத்தில் பறக்கவிட்ட பாஷ்யத்தை தெரியாது. 'சென்னை கோயம்பேடு மெட்ரோவிற்கு, 'பாஷ்யம்' பெயரை சூட்டியுள்ளனர். யார் இந்த பாஷ்யம்? அந்த மெட்ரோ நிலையத்தை விலைக்கு வாங்கி இருக்கின்றாரா? அந்த நிலையத்தை கட்டிக் கொடுத்த கான்ட்ராக்டரா?' என, அறிவிலியாய் கேட்கிறார்,
வைகோ.அவரை சொல்லி குற்றமில்லை. ஈரோடு பள்ளியிலும், காஞ்சிபுரத்து கல்லுாரியிலும் பெற்ற அறிவு அது! 'பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ' என்ற பெயர், அவர் கண்ணை உறுத்துகிறது; ஏனென்றால், அய்யங்கார் பெயர் ஆயிற்றே... அதனால், கண்டிப்பாக உறுத்தும். வ.உ.சி., உள்ளிட்டோருக்கு பெரும் உதவியும், தலைவருமாக இருந்த திலகரின் பெயரை, மெரினாவில் உள்ள திடலுக்கு சூட்ட வேண்டும் என, சுப்பிரமணிய சிவா முன்மொழிந்தார்; பாரதியார் வழிமொழிந்தார். அது, 'திலகர் திடல்' என்றழைக்கப்பட்டது.
தி.மு.க.,வை உருவாக்கிய அண்ணாதுரை, 1967ல் முதல்வரானதும், 'திலகர் திடல்' எனும் பெயரை மாற்றி, 'சீரணி அரங்கம்' என்று பெயர் சூட்டி, மகிழ்ந்தார். கத்திப்பாரா மேம்பாலம் வருவதற்கு முன், அந்த இடத்தில், நம் நாட்டின் முதல் பிரதமர் நேருவின் சிலை இருந்தது. நேருவின் கையில் சமாதான சின்னமாக புறா இருக்கும்படியான அந்த சிலை, அற்புதமாக இருந்தது.

கடந்த, 2005ல், தி.மு.க.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, அந்த சிலையை அகற்றினார். மனைவி இறந்த போது கூட, பரோலில் வராமல் சிறையிலிருந்த தியாகி நேரு. திராவிட இயக்கம், அவர்களுக்கு எல்லாம் அவ்வளவு தான் மரியாதை கொடுக்கும்! முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒருமுறை, 'பாரதி, பார்ப்பனன் என்பதால், நாங்கள் மதிப்பதில்லை' என்றார்.
கொள்ளையடிப்பதற்காகவே அரசியலுக்குள் நுழைந்த திராவிட கழகங்களால், நாட்டுக்காக போராடிய தியாகிகளுக்கு அவமரியாதை ஏற்படுவதை, எக்காலத்திலும் தடுக்க முடியாது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE