திருநெல்வேலி : ''எங்கள் கட்சியில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். மக்களோடு மக்களாக இருப்பது அ.தி.மு.க., கட்சி,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில், நேற்றைய பிரசாரத்தில் முதல்வர் பேசியதாவது: அ.தி.மு.க., அரசு, 30 ஆண்டு காலம், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தந்துள்ளது. மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை தரும் ஆட்சி, அ.தி.மு.க., அரசு தான். 52 லட்சம் மாணவ - மாணவியருக்கு, 7,000 கோடியில் 'லேப்டாப்' வழங்கப்பட்டு உள்ளது.உயர்கல்வியில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. துணை முதல்வர், உள்ளாட்சி அமைச்சராக இருந்த ஸ்டாலின், அப்போது பொதுமக்களை சந்திக்காமல், அதிகாரம் இல்லாதபோது மனு வாங்குகிறார்.

கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பதை தவிர, உதயநிதிக்கு வேறு என்ன தகுதி உள்ளது. என் அனுபவம் தான், அவரது வயது. தி.மு.க., அறிவிப்புகளை உதயநிதி வெளியிடும் அளவுக்கு, அக்கட்சி பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இவ்வாறு, அவர் பேசினார்.
பெயர் சூட்டிய முதல்வர்
பிரசாரத்தின்போது நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண் குழந்தைக்கு நிஷாந்தினி எனவும், இன்னொரு ஆண் குழந்தைக்கு தர்ஷன் எனவும் முதல்வர் பெயர் சூட்டினார்.அதன்பின் திருக்குறுங்குடியில் பிரசாரம் செய்தவர், களக்காடில் மகளிர் குழு கருத்தரங்கிலும், சேரன்மகாதேவியில் இளம்பெண், இளைஞர் பாசறையினருடனும் கலந்துரையாடினார். திருநெல்வேலியில் மதிய உணவு முடித்து, ஆலங்குளம், தென்காசி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
அராஜக கட்சி
களக்காடில் மகளிர் சுய உதவி குழுக்களுடன் நடந்த கலந்துரையாடலில், இ.பி.எஸ்., பேசியதாவது:பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கட்சி, அ.தி.மு.க., தான். 12.51 லட்சம் பேருக்கு, திருமண உதவி திட்டத்தின்படி தாலிக்கு, 1 சவரன் தங்கம், 50 ஆயிரம், 25 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளோம். இந்தியாவில் எந்த அரசும் இதை வழங்கவில்லை.நான் கிராமத்தில் பிறந்தவன். மக்கள் பிரச்னை எனக்கு தெரியும். ஸ்டாலின் அப்படியல்ல. அவருக்கு மக்கள் கஷ்டம் தெரியாது.
அ.தி.மு.க., வில் கிளைக் கழக செயலர் முதல், உழைப்பின் மூலம் முதல்வர் பொறுப்பிற்கு வந்துள்ளேன். இது, மக்களின் அரசு.நான் முதல்வர் என, ஒருபோதும் நினைத்துக் கொள்வதில்லை. ஸ்டாலின், மூன்று மாதங்களில், முதல்வராக போவதாக கூறுகிறார். தி.மு.க., ஒரு அராஜக கட்சி, அடாவடிக் கட்சி. ஜெ., சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, அவருக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க., வந்தால் பெண்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ முடியாது.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE