சென்னை : ஊரகப்பகுதி முன்னுரிமை திட்டத்தின் கீழ், அமைச்சர் தங்கமணியின், குமாரபாளையம் தொகுதியில் நடக்கும் பணிகளுக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, அனிமூர் பஞ்சாயத்து தலைவர் தாமரைச்செல்வன் தாக்கல் செய்த மனு:நாமக்கல் மாவட்டத்தில், ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஊரகப்பகுதி முன்னுரிமை திட்டங்களுக்காக, இம்மாவட்டத்தில், 28.41 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதில், குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும், 20.61 கோடி ரூபாய்; பரமத்துார் தொகுதிக்கு, 30.60 லட்சம் ரூபாய்; சேந்தமங்கலம் தொகுதிக்கு, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்ற, மூன்று தொகுதிகளுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. குமாரபாளையம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கமணி, அமைச்சராக உள்ளார். மூன்று தொகுதிகளை புறக்கணித்து விட்டு, ஒரு தொகுதிக்கு மட்டும், முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறை ஆணையரின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'அமைச்சர் தங்கமணி, தன் தொகுதியை வளப்படுத்தும் விதமாக, அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளையும் சமமாக கருத வேண்டும். தேர்தல் நெருங்குவதால், இப்பணிகளுக்கான, டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார்.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''குமாரபாளையம் தொகுதியில், 237 பணிகளுக்கு, 'டெண்டர்' கோரப்பட்டு, 25 சதவீத பணிகள் துவங்கப்பட்டு விட்டன. நான்கு ஆண்டுகளில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ஆறு தொகுதிகளுக்கும் சம அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம்,'' என்றார்.இதையடுத்து, விசாரணையை மார்ச், 4ம் தேதிக்கு தள்ளி வைத்த முதல் பெஞ்ச், பணிகள் துவங்கி விட்டதால், அவற்றை தடுக்க முடியாது என, கூறியது. பணிகளுக்கான டெண்டர் கோரியது; பணி வழங்கிய விபரங்களை, மனுதாரர் தரப்புக்கு வழங்கவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.