சென்னை : அறநிலையத் துறை சார்பில், 'திருக்கோவில் டிவி' துவங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த, 'இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்' தலைவர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:அறநிலையத் துறை சார்பில், 'திருக்கோவில் டிவி' துவங்குவதற்கு, 2020 டிச., 14ல், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்காக, பொது நிதியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொது நிதியில் இருந்து, 20 கோடி ரூபாயை ஒதுக்க முடிவு செய்திருப்பது, சட்ட விதிகளை மீறுவதாகும். சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்கு மட்டுமே, பொது நிதியை பயன்படுத்த முடியும்.உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே, திருக்கோவில், 'டிவி' துவங்க, பொது நிதியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். 2020 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு விசாரித்தது. அறநிலையத் துறை சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், சிறப்பு பிளீடர் கார்த்திகேயன் ஆஜராகினர்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கோவில்களில் நடக்கும் பூஜை, விழாக்கள் தொடர்பாக, 'டிவி'யில் ஒளிபரப்ப உள்ளதாகவும், ஆன்மிகம், தத்துவங்களை பரப்பவும், கலாசார பண்பாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்ப இருப்பதாகவும், துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வழிபாட்டு தலம் என்பது மட்டுமல்லாமல், நம் பாரம்பரியம், கலாசாரம், சிற்பங்கள், ஓவியங்களின் செழுமையை காட்டும் மையங்களாகவும், கோவில்கள் திகழ்கின்றன.
'டிவி' துவங்குவது, அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் தலையிட முடியாது என, ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அந்த கருத்தில், நாங்களும் உடன்படுகிறோம்.விதிகளில் கூறப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றுவது என்பது, தேவைப்படும் கோவில்களின் புனரமைப்பு மற்றும் அதன் சொத்துக்கள் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்குவதற்கு தான் பொருந்தும். மற்ற காரியங்களுக்கு அல்ல. எனவே, இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
வழிபாட்டு தலங்களின் தல புராணம்; மடாதிபதிகளின் போதனைகள்; பழமையான ஆன்மிகத்தை பரப்புவதே, 'டிவி' சேனலின் நோக்கம் என்றாலும், இதை உலகம் முழுவதும் மேற்கொள்கின்றனர். இதற்கு, நாம் விதிவிலக்கு அல்ல.நம் நாட்டின் தனித்துவமான ஆன்மிகம், கலாசாரம், தத்துவங்களின் செழுமை, முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக, இந்த சேனல் இருக்கும் என, நாங்கள் நம்புகிறோம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE