கோவை : ''உலகையே குடும்பமாக கருதும் சிந்தனையால், உலக நாடுகளுக்கு குருவாக இந்தியா விளங்கி வந்தது. அதை மீட்டெடுக்க ஆர்.எஸ்.எஸ்., இயங்கி வருகிறது,'' என்று, மோகன் பாகவத் பேசினார்.
கோவை, 'கொடிசியா' கண்காட்சி அரங்கில் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், கோவையின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:உலக நாடுகளில் வித்தியாசமானது நம் நாடு. நம் முன்னோர் ஏராளமான நல்ல விஷயங்களை பொக்கிஷமாக தந்துவிட்டு சென்றுள்ளனர்.
வேறுபாடுகள் பல இருந்தாலும், நம் நாடு அனைத்துத் துறையிலும் முதன்மையாக விளங்கியது.நாடு உன்னதமான நிலையை அடைவதற்கு, தனிமனித நிர்மாணம் மட்டுமே தீர்வு என்பதை உணர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை, கேசவ் பலராம் ஹெட்கேவர் துவங்கினார்.
தினமும் ஒரு மணி நேர பண்பு பயிற்சி வாயிலாக, தனிமனித நிர்மாணம் மேம்பட்டு, தேசத்தின் புனர் நிர்மாணம் என்ற இலக்கை அடைய ஆர்.எஸ்.எஸ்., இயக்கங்கள், தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைய, வேறு எந்த நடைமுறைகளும் தேவையில்லை. உங்கள் அனைவரையும் நம் தேசப்பணியில் இணைய அழைப்பு விடுக்கிறேன்.
உலக நாடுகளுக்கு எல்லாம், வேறு நாடுகளை கைப்பற்றுவதில் தான் ஆர்வம் இருந்தது. ஆனால், உலகையே குடும்பமாக கருதும் சிந்தனையே இந்திய தேசத்துக்கு இருந்தது. அதனால் தான், உலக நாடுகளுக்கு குருவாக இந்தியா விளங்கி வந்தது. மீண்டும் அந்த நிலையை அடைய, ஆர்.எஸ்.எஸ்., பணியாற்றி வருகிறது. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கோவை தொழில், வர்த்தக துறைகளை சார்ந்த, 415 பேர் பங்கேற்றனர்.ஆர்.எஸ்.எஸ்., தென்பாரத தலைவர் வன்னியராஜன், தென் தமிழக தலைவர் ஆடலரசன், கோவை கோட்டத்தலைவர் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE