சென்னை : 'வாங்கிய கடனை திருப்பி தருவது தொடர்பாக, இயக்குனர் கஸ்துாரி ராஜா எழுதிய கடிதம், நடிகர் ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவிடம், நடிகர் தனுஷ் தந்தையும், இயக்குனருமான கஸ்துாரி ராஜா, 65 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், கடன் தொகையை திருப்பி தரவில்லை என்றால், ரஜினி தருவார் என, கஸ்துாரிராஜா கடிதம் அனுப்பி இருந்ததாகவும் கூறப்பட்டது.பெயரை தவறாக பயன்படுத்திய, கஸ்துாரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, ரஜினிக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில், போத்ரா தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.
விளம்பரத்துக்காக, வழக்கு தாக்கல் செய்ததாக, போத்ராவுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் போத்ரா மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், போத்ரா மறைவை தொடர்ந்து, அவரது மகன் சுகன் போத்ரா, வழக்கை தொடர்ந்து நடத்த, நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் கிருபாகரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாங்கிய கடனை திருப்பி செலுத்தும்படி, நீதிபதிகள் அறிவுறுத்தினர். 'பணத்தை திருப்பி தருவது தொடர்பாக, கஸ்துாரி ராஜா எழுதிய கடிதம், ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும்' என்றும் கேள்வி எழுப்பினர்.இந்தப் பிரச்னை தொடர்பாக, ஒரு வாரத்தில் தீர்வு காணும்படி கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE