சசிகலா வந்ததும், தமிழக அரசியலில் பிரளயமே நடக்கும் என, 'பில்டப்' கொடுத்தது, தினகரன் தரப்பு. ஸ்டாலின் வேறு அதை நம்பி, இனிமேல் அவ்வளவுதான், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ் என, வழி நெடுக, 'அருள்வாக்கு' சொல்லி சென்றார்.
ஆலமரத்தில் இலைகூட அசையவில்லை. 'அப்செட்' ஆகி கிடக்கிறது, அ.ம.மு.க., கூடாரம். பொது வெளியில் எடுக்கும் முயற்சிகள்தான், புஸ்வாணமாகின்றன. சட்ட வெளியில் முயன்றால், பட்டாசு வெடிக்கலாம் என, வழக்கறிஞர் பிரிவு உற்சாக ஊசி போட்டிருக்கிறது வழக்கம் போல. துரும்பு கிடைத்தாலும் தொற்றிக் கொண்டு கரை சேர துடிக்கும் நிலைமை.
சம்மதம் சொல்லி விட்டார் சசி. கோர்ட்டுக்கு ஓடினார்கள், அ.ம.மு.க., வக்கீல்கள். பொது செயலாளர் பதவியை ஒழித்து, ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புகளை உருவாக்கியது செல்லாது என, வழக்கு போட்டுள்ளனர். முன்பே போட்ட வழக்குதான். நிலுவையில் இருந்த வழக்கை, சிவில் கோர்ட்டுக்கு மாற்றி விட்டது, ஐகோர்ட். சீக்கிரம் விசாரிக்க சசி வக்கீல் கோரிக்கை வைத்துள்ளார்.

வழக்கம் போல வாய்தா கிடைக்கும் என எதிர்பார்த்ததற்கு மாறாக, மார்ச் 15ம் தேதி விசாரணை என்று நாள் குறித்து விட்டது கோர்ட். சசி அணிக்கு செம குஷி. தேர்தலுக்கு முன்பே விசாரணைக்கு வருவதால், இரட்டை இலைக்கே ஆபத்து என்பதை உணர்ந்து இரட்டையர்கள் இறங்கி வருவார்கள் என எதிர்பார்க்கிறது.
சிவில் கோர்ட் வழக்குகள் கண் திறக்க எத்தனை காலம் பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, அ.தி.மு.க., பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனாலும் ஒரு சலசலப்பு கேட்கிறது. பொதுக்குழு தீர்மானத்துக்கு தடை வந்தாலே, எல்லாம் தடம் புரண்டு விடுமே என்ற பயம்தான். பதட்டமே இல்லாமல் போனால் தேர்தல் களம் சுவைக்குமா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE