புதுடில்லி: போராட்டம் 2 மாதங்களில் முடியும் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். நாங்கள் அறுவடையும் செய்வோம் போராட்டமும் நடத்துவோம் என விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தேவைப்பட்டால் தேர்தல் களம் காணும் மேற்கு வங்கத்திற்கு எங்கள் டிராக்டர்களை கொண்டு செல்வோம் என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு எச்சரித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில் 80 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால், டிராக்டர் பேரணி, சாலை மறியல், ரயில் மறியல் என போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் டில்லி எல்லையில் பெரிய அளவில் விவசாயிகளை குவித்து போராட்டத்தை பலப்படுத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. மேலும், இம்மாத இறுதியில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு மூத்த தலைவர் ராகேஷ் திகைத் கூறியதாவது: பயிர் விலைகள் உயர்த்தப்படவில்லை, ஆனால் பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் ஏற்றுகின்றனர். இப்படியே மத்திய அரசு சென்று கொண்டிருந்தால் நாங்கள் எங்கள் டிராக்டர்களை தேர்தல் களமான மேற்கு வங்கத்துக்கும் கொண்டு செல்வோம். அங்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் மீண்டும் பயிர்த்தொழிலுக்குச் செல்வார்கள் என்ற எந்த ஒரு தவறான கண்ணோட்டத்தையும் மத்திய அரசு கொள்ள வேண்டாம்.

அவர்கள் எங்கள் போராட்டங்களை ஒடுக்குவதில் முனைப்புக் காட்டினால் நாங்கள் பயிர்களை எரித்து விடுவோம். போராட்டம் 2 மாதங்களில் முடியும் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். நாங்கள் அறுவடையும் செய்வோம் போராட்டமும் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ‛பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தோல்விக்கும் விவசாயப் போராட்டத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை' எனக் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE