மும்பை : ஐபிஎல்., ஏலத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன், மும்பை அணிக்காக ஒப்பந்தமாகி உள்ளார். இவர் தேர்வானதை வைத்து விளையாட்டிலும் வாரிசு அரசியல் விளையாடுகிறது என்ற வாதம் டுவிட்டரில் ஒலிக்க தொடங்கி உள்ளது.
14வது ஐபிஎல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கடைசி நபராக இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் பல சாதனைகளை நிகழ்த்திய சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனும் வந்தார். ஏலத்தொகையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அவரை வேறு எந்த அணியும் வாங்க முன்வராத நிலையில் ரூ.20 லட்சத்திற்கு மும்பை அணியே ஏலத்தில் எடுத்தது.
அர்ஜுன் தேர்வானது சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. காரணம் முதல்தர போட்டிகளில் இவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி டிராபியில் கூட ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். மேலும் டுவென்டி-20 போட்டிகளிலும் 2 விக்கெட் மட்டுமே சாய்த்துள்ளார். இதனால் அவர் தேர்வாகி இருப்பது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் விளையாட்டிலும் வாரிசு அரசியல் இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் அர்ஜுனை விட முதல்தர மற்றும் டுவென்டி-20 போட்டிகளில் சாதித்த பல திறமையான வீரர்கள் இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் சச்சின் மகன் என்பதற்காக வாய்ப்பு தந்துள்ளது தவறு என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் அர்ஜுனையும், அவரை விட திறமையான வீரர்களையும் ஒப்பிட்டு கருத்து தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் அர்ஜுனுக்கு ஆதராவாகவும் சிலர் குரல் கொடுத்துள்ளனர். ''இந்திய நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடி பல சாதனைகளை படைத்தவர் சச்சின். அவரின் வாரிசுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. விளையாடட்டுமே அதற்குள் ஏன் அவர் மீது இவ்வளவு விமர்சனங்கள் வைக்கிறீர்கள். கிரிக்கெட் வீரரின் மகன் அதே துறைக்கு வரக்கூடாதா...'' என கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் ஐபிஎல்லில் அர்ஜுன் தேர்வை வைத்து #Nepotism, #Arjun, #Arjuntendulkar ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE