'பார்க்கத் தான் கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறீர்கள்; இயல்பில், மென்மை இதயம் படைத்தவராக இருப்பீர் போலிருக்கிறதே...' என, பாராட்டத் தோன்றும் வகையில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி: சாத்துார் பட்டாசு விபத்தில் தாய், தந்தையை இழந்துள்ள சிறுமி நந்தினிக்கு தேவையான உதவிகளை, படிப்பு செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். அந்த குழந்தை மீது தனி கவனம் செலுத்தி, எங்கள் வீட்டு பிள்ளையாக கவனித்துக் கொள்வோம். அந்த குழந்தையை ஏற்றுக் கொள்வது எங்கள் பொறுப்பு.
'எப்போ விலை உயரும், கட்டணத்தை உயர்த்தலாம் எனக் காத்திருந்தீர்களோ...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முருகன் வெங்கடாசலம் பேட்டி: உலகில் பெட்ரோல், டீசலின் விலை குறைந்து வரும் நிலையில், நம் நாட்டில் மட்டும் அதிகரிக்கிறது. இதை, வாடகை வாகன உரிமையாளர்களால் சமாளிக்க முடியவில்லை. எனவே, அடுத்த மாதம், 3ம்தேதி முதல், தற்போதுள்ள வாடகையிலிருந்து, 30 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
'கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல் உள்ளனர்; அதுவே பெரிய சாதனை தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் பேட்டி: தலைமை எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் போட்டியிட தயாராக உள்ளேன். அ.தி.மு.க.,வில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. ஆதாயம் தேட வேண்டும் என்றே சிலர், அ.தி.மு.க.,வில் கருத்து வேறுபாடு உள்ளதாக கூறி வருகின்றனர்.
'நீங்கள் எந்த பேட்டி அளித்தாலும், உடனே நிறைய கட்சிக்காரர்களும், பின்னால் ஏராளமான பிரமுகர்களும் நிற்கின்றனரே எதற்காக...' என, கேட்கத் தோன்றும் வகையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி: மத்திய அரசு, சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதன் அடிப்படையில், தமிழக அரசும், பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை பட்டியலை தயாரித்து, முதல்வரின் ஒப்புதலோடு வெளியிட்டுள்ளது.
'உண்மை தான். சினிமா தவிர்த்து, விவசாயம் போன்ற துறைகள், மத்திய அரசுக்கு தெரிவதில்லையோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: மத்திய அரசு ஆண்டுதோறும், பத்ம விருதுகளை வழங்குகிறது. மக்கள் தொகையில், 60 சதவீதமாக உள்ள விவசாயிகளுக்கு, இவ்விருதை, அரசு கிள்ளி தான் கொடுக்கிறது.சினிமா துறையினருக்கு தான், பத்ம விருதுகள் அதிகம் கொடுக்கப்படுகிறது. விவசாயிக்கு நாட்டில் அவ்வளவு தான் மரியாதை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE