மக்கள் நீதி மய்யம் கட்சி, கணிசமாக ஓட்டு வாங்கும் என்று, ஐபேக் சர்வே மூலம், தி.மு.க., மேலிடம் தெரிந்து கொண்டிருக்கிறது.
இதனால், எப்படியாவது கமலை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் ஸ்டாலின் இறங்கியுள்ளார். மருமகன் சபரீசனை அனுப்பி, கமலுடன் இரண்டு ரவுண்டு பேசியுள்ளார்.ரகசியமாக நடந்தாலும், இந்த சந்திப்புகள் உளவுத்துறையின் கழுகுக் கண்களுக்கு தப்பவில்லை. அது கொடுத்த தகவலை படித்து, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு ஒரே ஆச்சரியம். ரஜினி என்றால் கூட பரவாயில்லை; கமலுக்கு அப்படி என்ன ஆதரவு இருப்பதாக நினைத்து அவரை துரத்துகிறார் ஸ்டாலின் என, விசாரித்துள்ளார். அப்போது தான், தி.மு.க., வசம் உள்ள தகவல்கள் என்ன என்பதை முதல்வருக்கு விளக்கி உள்ளனர், உளவுத்துறை அதிகாரிகள்.

லோக்சபா தேர்தலில், தென் சென்னை, ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, புதுச்சேரி தொகுதிகளில் மூன்றாம் இடத்தை மய்யம் பிடித்தது. அவற்றில் அடங்கிய, 34 சட்டசபை தொகுதிகளில், 6 சதவீதமும், 15 தொகுதிகளில், 10 சதவீதமும், ஆறு தொகுதிகளில், 13 சதவீதமும், அக்கட்சி ஓட்டு வாங்கியுள்ளது.
அதாவது, 55 தொகுதிகளில், 6 சதவீதத்துக்கு குறைவில்லாமல் ஓட்டு வாங்கி இருக்கிறது. தலா ஒரு சட்டசபை தொகுதிக்கு, 12 ஆயிரத்துக்கும் குறையாத ஓட்டு என்று சொல்லலாம்.அதைவிட குறைவாக, ஒவ்வொரு தொகுதியிலும், 8,000 ஓட்டுகளை கமல் கட்சி கைப்பற்றினால்கூட, அ.தி.மு.க.,வை மோசமாக பாதிக்கலாம். மிகவும் குறைந்த வித்தியாசத்தில், தோல்வியை சந்திக்க நேரலாம் என, முதல்வரிடம் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலில், இப்படித்தான் பல தொகுதிகளில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், தி.மு.க., தோற்றுள்ளது. 34 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் 3,000க்கு கீழே தான் இருக்கிறது. நாற்பது ஓட்டு வித்தியாசத்தில் கூட, தோல்வி ஏற்பட்டுள்ளது. இதையும் அதிகாரிகள் விளக்கினர்.கவனமாக கேட்ட முதல்வர், அப்படி என்றால் அவர் நம் கூட்டணிக்கு வர வழியை தேடுங்கள் என, சீனியர்கள் மூவரிடம் கூறியிருக்கிறார்; அ.தி.மு.க.வுக்கு வர வேண்டிய ஓட்டுகளை, கமல் பிரிக்காமல் தடுக்க வழி சொல்லுமாறும், இன்னொரு குழுவிடம் கேட்டிருக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE