பூமியை பசுமையாக்க... | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூமியை பசுமையாக்க...

Added : பிப் 20, 2021
Share
'ஏதாவது சுய தொழில் செய்யணும், அதிக முதலீடும் இருக்கக் கூடாது, நாலு காசு வருமானமும் பார்க்கணும், நாலு பேருக்கு பயன்படுற மாதிரியும் இருக்கணும்...' அப்படினு ஆசை இருக்கும். இதைப்பத்தி யார் கிட்டவாவது யோசனை கேட்டா, 'இதெல்லாம் நடக்கற காரியமா' அப்படினு சிரிப்பாங்க.ஆனா, அப்படியும் ஒரு கைத்தொழில் இருக்குங்க. குறைந்த முதலீடு, சூழல் அக்கறை மற்றும் சமுதாயத்தில் மரியாதை,
 பூமியை பசுமையாக்க...

'ஏதாவது சுய தொழில் செய்யணும், அதிக முதலீடும் இருக்கக் கூடாது, நாலு காசு வருமானமும் பார்க்கணும், நாலு பேருக்கு பயன்படுற மாதிரியும் இருக்கணும்...' அப்படினு ஆசை இருக்கும். இதைப்பத்தி யார் கிட்டவாவது யோசனை கேட்டா, 'இதெல்லாம் நடக்கற காரியமா' அப்படினு சிரிப்பாங்க.ஆனா, அப்படியும் ஒரு கைத்தொழில் இருக்குங்க. குறைந்த முதலீடு, சூழல் அக்கறை மற்றும் சமுதாயத்தில் மரியாதை, நிதானமான வருமானம் எல்லாமே இருக்குற மாதிரி ஒரு தொழில் நிஜமாவே இருக்குங்க. அது தான், விதைப்பந்துகள் விற்பனை.பூமித்தாய், பசுமையை இழந்து பாழாகி வருவது குறித்த ஆழ்ந்த கவலை இருக்கு. ஒவ்வொரு வளர்ச்சி திட்டத்துக்கும், ஆயிரக்கணக்கான மரங்கள் பலியாவது தவிர்க்க முடியாததாக இருக்கு. அப்படி இழக்கப்படும் மரங்களை மீண்டும் உருவாக்க நாம் ஆயுள் முழுக்க போதாது தான்.ஆனா, நம்மால முடிஞ்ச வரைக்கும் பசமையை உருவாக்கி, சூழலுக்கான பங்களிப்பை ஏற்படுத்தி திருப்தி அடையலாம். மரங்களை உருவாக்குறதுல ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறது. மற்றொன்று, விதைப்பந்துகளை வீசி, செடிகளை இயற்கையா முளைக்க வைக்கிறது.இதுல ரெண்டாவது வகையான விதைப்பந்து வீசுதல், நடைமுறையில் எளிமையா இருக்கு; அதிக மரங்களை உருவாக்க வழி செய்யுது. இது வரைக்கும், விதைப்பந்துகளை தன்னார்வலர்கள் தாங்களாகவே முன்வந்து செய்துட்டு இருக்காங்க. இதை தயாரித்து விற்பனை செய்யும் போது, பிறந்த நாள், திருமண நாள், தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள், தேசிய நாட்கள் என முக்கிய நாட்களில் விதைப்பந்துகளை வீசும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தலாம்.மேலும், மரம் வைத்து பாதுகாத்து வளர்க்க முடியாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மரம் செடி, கொடிகளை பரிசாக அளிக்கின்றனர். அதேபோல், தற்போது விதைப்பந்துகளை பரிசாக வழங்க முன்வருகிறார்கள்.இந்த விதைப்பந்து தயாரிப்பை பொருத்த வரை, முதலீடு என்று சொல்லப்போனால் வெறும், 3,000 - 5,000 ரூபாய் மட்டுமே. களிமண், செம்மண், பசுஞ்சாணம் போன்ற கலவையின் உள்ளே விதைகளை வைத்து, கிரிக்கெட் பந்துபோல் உருட்டி விதைப்பந்து தயாரிக்கலாம்.தயாரிக்கும் முறைசெம்மண் அல்லது களிமண், மக்கிய ஆட்டு எரு அல்லது மாட்டு எரு, நாட்டு மர விதைகள் இவை தான் விதைப்பந்து தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களாகும். ஒரு மடங்கு விதை, ஐந்து மடங்கு மண், மூன்று மடங்கு எரு, ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும். இதில், விதைகள் பந்தின் உட்பகுதியில் இருப்பது போல தயாரிப்பது அவசியம்.சிறிதளவு நீர் ஊற்றிப் பிசைந்து, விதைகளை வைத்து நிழலில் உலர்த்தி, பின் வெயிலில் ஒருநாள் உலர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் விதை பந்துகளில் வெடிப்பு எதுவும் ஏற்படாமல் நன்கு உலர்ந்து விடும்.இந்த விதை பந்து பிற பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். குறிப்பாக பறவைகள், எறும்புகள், எலி போன்றவைகளிடமிருந்து ஒரு ஆண்டு வரை பாதுகாக்கும். விதை பந்தில் கலந்துள்ள சாணமானது, நுண்ணுயிர்களை உருவாக்கி, செடியின் வேர், மண்ணில் எளிதில் சென்று வளர்வதற்கு உதவும்.என்ன விதைகள்வேம்பு, புங்கன், வேல், வெள்ளை வேல், சந்தனம், சீதாப்பழம், வேங்கை, மகிழம், வாகை, கொய்யா, புளி, ஆலமரம், அரசு, புன்னை, வில்வம், வள்ளி, கருங்காலி, நாகலிங்கம் இவ்வகை நாட்டு மரங்களின் விதைகளை பயன்படுத்தி, விதைப்பந்து தயாரிக்கலாம்.சந்தை வாய்ப்பு தனியார் நிறுவனங்கள் சமூக பங்களிப்பாகவும், தனிநபர்கள் தங்களின் முக்கிய நாட்களிலும் விதை பந்துகளை பரிசாக வழங்க முன்வருவார்கள். அதேபோல், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளிலும் விருந்தினர்களுக்கு விதைப்பந்து பையை பரிசாக வழங்கலாம். எனவே விதை பந்துகளை அழகாக செய்து, பேக்கிங் செய்து, அதில் பரிசு வழங்குபவர்களின் பெயர்களை அச்சிட்டு அளித்தால், விற்பனை அதிகரிக்கும். இதை 'ஆன்லைன்' வாயிலாகவும் நாடு முழுக்க விற்பனை செய்ய முடியும்.பொள்ளச்சி, உடுமலை போன்ற கிராமப்பகுதிகளில் வசிப்போர்க்கு, விதைப்பந்து தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள், 90 சதவீதம் இலவசமாகவே கிடைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த யோசனையை கேட்கும் போது, 'வாழச் சொல்லுது வாழ்க்கையடா... வாழ்வில் துன்பம் செயற்கையடா...' என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வரும். ஆம்... பூமியை பசுமையால் வென்றெடுக்க, அணுகுண்டு தேவையே இல்லை! சின்னஞ்சிறு விதைக் குண்டு போதும்!.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X