தரிசு நிலத்தை சோலையாக்கி, நிழல் தந்த மரங்களை கட்டுமான பணிகளுக்காக, பலி கொடுக்காமல், மறுநடவு செய்து, அவற்றுக்கு, புத்துயிர் கொடுக்க போராடி வருகின்றனர் சோமவாரப்பட்டி கிராம மக்கள்.உடுமலை அருகே சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெதப்பம்பட்டியில், கால்நடைத்துறையின், கால்நடை மருந்தகம், 1965ல், துவங்கப்பட்டது. இந்த மருந்தக தேவைக்காக, அப்பகுதியினர், நான்கு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர்.மருந்தகம் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டடம் தவிர்த்து பிற இடம், காலியாக தரிசாக காணப்பட்டது. இதனால், கால்நடைத்துறைக்கு சொந்தமான இடம், ஆக்கிரமிக்கப்படும் நிலை உருவானது; சுற்றுச்சுவர் இல்லாமல், அப்பகுதியின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக இருந்தது.கடந்த, 2013ல், அப்போதைய வருவாய் கோட்டாட்சியர் லதா, தாசில்தார் சைபூதீன், டாக்டர் மாரீஸ்வரன் உட்பட குழுவினர் முயற்சியால், கால்நடைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, கால்நடைத்துறையால், சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.பின்னர், காலியாக இருந்த இடத்தில், சோமவாரப்பட்டி கிராம மக்கள், மற்றும் குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் சார்பில், 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. வேலை உறுதியளிப்புத்திட்ட பணியாளர்கள் வாயிலாக, குறிப்பிட்ட இடைவெளியில், தண்ணீர் ஊற்றி, பராமரிக்கப்பட்டது.முறையாக பராமரிப்பு செய்து வந்ததால், மரக்கன்றுகள் செழித்து வளர்ந்து, தரிசாக கிடந்த நிலம், குறு வனமாக மாறியது. சுற்றுச்சுவரை ஒட்டி, அரளிச்செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டது. தங்களது முயற்சியால், தரிசு நிலம் சோலையாக மாறியதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், கோழிக்குட்டையில், கால்நடை மருத்துவ கல்லுாரி அமைக்கவும், பெதப்பம்பட்டி கால்நடை மருந்தகத்தை பயிற்சி மையமாகவும், மாற்ற அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பயிற்சி மையத்தின் தேவைகளுக்காக கூடுதல் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டு, செழித்து வளர்ந்துள்ள மரங்களை அகற்ற வேண்டிய நிலை உருவானது.இதனால், சோகமடைந்த சோமவாரப்பட்டி கிராம மக்கள், பல ஆண்டுகள் பராமரித்த மரங்களின் அழிவை தவிர்க்க, மறுநடவு செய்ய திட்டமிட்டனர். இதற்காக, பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவில் எதிரிலுள்ள, ஓடையை ஒட்டியுள்ள காலியிடத்தை தேர்வு செய்தனர்.முதற்கட்டமாக, புங்கன், நாவல், புளி, வேம்பு உட்பட மரக்கன்றுகளை, கால்நடைத்துறையினர், கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர், கிராம மக்கள் உதவியுடன், மறுநடவு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. மறுவாழ்வு பெறும் மரங்களுக்கு, தண்ணீர் பாய்ச்ச, அப்பகுதி தன்னார்வலர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மறுநடவு செய்த, மரங்கள் கிளை விட்டு, துளிர்த்தால், கிராம மக்களுக்கு, மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மேலும், குடிமங்கலம் ஒன்றிய, சோமவாரப்பட்டி ஊராட்சி நிர்வாகம், தன்னார்வ அமைப்புகள், உதவினால், ஓடைக்கரையில், மீண்டும் குறுவனம் உருவாகி, அப்பகுதி செழிக்க உதவும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE