பொள்ளாச்சி:''பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்,'' என, பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை, உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் மனு கொடுத்து வலியுறுத்தியது.பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பங்கேற்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியை, தொழில்வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், சார்பு சங்க பிரதிநிதிகள் சந்தித்தனர். அமைச்சரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்க, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, பூர்வாங்கபணி துவங்கியது. தொடர்ச்சியாக தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் அறிவிப்பு வரும் போது, பொள்ளாச்சி மாவட்டமும் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. வரும், 24ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில் தமிழக அரசு பொள்ளாச்சி தனி மாவட்டம் அறிவிப்பை, பிறந்த நாள் பரிசாக வழங்க கூடும் என நம்பிக்கை உள்ளது. பொதுமக்கள், அனைத்து சார்பு சங்கங்கள் இணைந்து பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபையின் வாயிலாக மனு கொடுத்துள்ளோம்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.* கோவை தெற்கு மாவட்ட ஹிந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில், பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து, தமிழக முதல்வருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கடிதம் வாயிலாக முதல்வருக்கு கோரிக்கை அனுப்பி வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE