ஊட்டி:'ஊட்டி அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணி வயிற்றில் குழந்தை இறந்த சம்பவத்தில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் முழு தகவல் தெரிய வரும்,' என, மருத்துவமனை டீன் தெரிவித்தார்.குன்னுார் அருகே, இந்திரா நகரை சேர்ந்த அருள்நாதன், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுநர். இவரது மனைவி நாகராணி, 23. நிறைமாத கர்ப்பிணியான இவரை கடந்த, 16ம் தேதி இரவு, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்த நாகராணிக்கு நேற்று முன்தினம் இரவு, கடுமையான வலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க கோரி அருள்நாதன் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.'மருத்துவர்கள் சுகப்பிரசவம் ஆகிவிடும்,' என கூறிய நிலையில், திடீரென வயிற்றில் உள்ள குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வயிற்றில் குழந்தை இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 'உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை,' என, அருள்நாதன் குடும்பத்தார் குற்றம்சாட்டி சம்மந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.அரசு மருத்துவமனை டீன் ரவீந்திரன் கூறுகையில், ''மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின், முழு தகவல் தெரியவரும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE