ஊட்டி:கல்லட்டி சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி அளித்த பின்னர், அடுத்தடுத்து ஏற்படும் விபத்துகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஊட்டி-கல்லட்டி வழியாக முதுமலைக்கு செல்ல, சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த, 2018ம் ஆண்டு சென்னை சுற்றுலா பயணிகள் இச்சாலையில் சென்ற போது, 34வது கொண்டை ஊசி வளைவில், கார் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. இதில்,5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதையடுத்து, இந்த சாலையில், சுற்றுலா வாகனங்கள், செல்ல தடை விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளுடன், உள்ளூர் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, சுற்றுலா வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டது.அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து, அடுத்தடுத்த, நான்கு விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர்.இந்நிலையில், நேற்று மதியம், சுற்றுலா பயணிகள், 5 பேர் காரில் கல்லட்டி சாலையில், கோழிக்கோடு திரும்பி கொண்டிருந்தனர். 28வது கொண்டை ஊசி வளைவில், நிலை தடுமாறிய வாகனம், 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.காரை ஓட்டி சென்ற சிங்சாங்,30, செரீப்,28, உட்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது, ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். புதுமந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மக்கள் கூறுகையில், 'இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்,' என்றனர்.எஸ்.பி., பாண்டியராஜன் கூறுகையில்,'' கல்லட்டி மலைபாதையில் சுற்றுலா வாகனங்கள் இயக்குவது குறித்து, ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE