திருப்பூர்:நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, திருப்பூருக்கு கொண்டு வரப்பட்ட, 4,200 தரமற்ற முட்டைகளை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வியாபாரி மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில், துரித உணவு கடையில், சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட, இரண்டு குழந்தைகள் சமீபத்தில் பலியாயின. இதைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதா தலைமையிலான குழுவினர், மாவட்டம் முழுதும் நடத்திய ஆய்வில், பண்ணைகளில் இருந்து கழிக்கப்படும் உடைந்த முட்டைகள், துரித உணவு, தள்ளுவண்டி கடைகள் மற்றும் சிறு ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
அவிநாசி ரோடு பகுதியில், நேற்று முன்தினம் இரவு, உணவு பாதுகாப்பு துறையினர், முட்டை ஏற்றி வந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். இதில், பயன்படுத்த தகுதியில்லாத, உடைந்த முட்டைகளை கொண்டு செல்வது தெரிந்தது.முட்டை வியாபாரி சந்திரசேகரிடம் விசாரித்தபோது, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் பகுதியில் உள்ள பண்ணைகளில் இருந்து, முட்டைகளை வாங்கி வந்தது தெரிந்தது. தரமில்லாத, 4,200 முட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை குழி தோண்டி புதைத்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், ''துரித உணவு கடைகளில் பயன்படுத்தும், முட்டை, இறைச்சி, எண்ணெய் குறித்து, தீவிர ஆய்வு நடத்தி வருகிறோம். தினமும் இதுபோன்ற தரமில்லாத முட்டைகள், திருப்பூருக்கு எடுத்து வந்து விற்கப்படுகின்றன. ''தரமற்ற முட்டைகளை கொண்டு வந்த வியாபாரி மீது, உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் - 2006ன் படி வழக்கு பதிந்து விசாரிக்கிறோம்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE