திருநெல்வேலி:''விழுப்புரத்தில் பேசிய ஸ்டாலின், இப்போது தான் முதல்வருக்கு புத்தி வந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். எனக்கு எப்போதோ புத்தி வந்துவிட்டது. உனக்கு புத்தி சரியில்லை,'' என, முதல்வர் பழனிசாமி., பேசினார்.
முழுங்கி விடுவர்
தென்காசி மாவட்டம், கடையநல்லுாரில், நேற்று காலை நடந்த பிரசாரத்தில், முதல்வர் பேசிய தாவது:ஸ்டாலின், தேர்தல் வந்தால் தான் மக்களை பற்றி யோசிக்கிறார்; தேர்தல் முடிந்ததும், மக்களை மறந்து விடுவார்.
விழுப்புரத்தில் பேசிய ஸ்டாலின், இப்போது தான் முதல்வருக்கு புத்தி வந்தது எனக் குறிப்பிட்டு பேசினார்.எனக்கு எப்போதோ புத்தி வந்துவிட்டது. உனக்கு புத்தி சரியில்லை. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால், கோரப்பசியில் உள்ளனர். விட்டால், ஆளையே முழுங்கி விடுவர் தி.மு.க.,வினர். விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில், அதிக எண்ணிக்கையில் தி.மு.க., வினர் தான் பயனடைந்து உள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த தி.மு.க., முன்னாள் எம்.பி., அக்னிராஜ் குடும்பத்தினரின் பயிர்க்கடன், 7 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.கடையநல்லுாரில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில், முதல்வர் பேசியதை கேட்க, திரளான முஸ்லிம் பெண்களும் வந்து இருந்தனர்.
மக்கள் அவதி
கடையநல்லுார் - தென்காசி மெயின் ரோட்டில், வேனில் நின்றபடி முதல்வர் பேசினார். அடுத்தடுத்து இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும், ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஆட்டோவும் அவ்வழியே வந்தன.
ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்ட முதல்வர், அவற்றுக்கு வழிவிட்டு ஒதுங்கும்படி, கட்சியினரிடம் கேட்டுக் கொண்டார். ஆயினும், அவர் வருவதற்கு முன்பே, நீண்ட நேரமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கடையநல்லுார் சாலையில் மக்கள் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து, புளியங்குடியில் நடந்த மகளிர் சுய உதவி குழுவினர் கூட்டத்தில், முதல்வர் பேசினார். பின், சங்கரன்கோவிலில் நடந்த இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் பங்கேற்றார்.அவர் வரும் வழியில், சங்கரன்கோவிலைச் சேர்ந்த சிறுவர்கள் வேட்டி, சட்டையுடன், தலையில் பச்சை நிற துண்டு அணிந்து, விவசாயிகளை போல வரவேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE