லோக்சபா தேர்தலில், இந்தியா முழுவதும், பா.ஜ., கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற போதும், தமிழகத்தில் நிலைமை மாறியிருந்தது. தி.மு.க.,- காங்., கூட்டணி, 38 தொகுதிகளில் ஒன்றை தவிர, அனைத்தையும் கைப்பற்றியது. அ.தி.மு.க., - பாரதிய ஜனதா கூட்டணி படுதோல்வி அடைந்தது.
ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு உள்ளிட்ட காரணங்களால், பிரதமர் மோடிக்கு எதிரான அலை வீசியது தான் காரணம் என, தி.மு.க., கூட்டணி கட்சிகள் குறிப்பிட்டன.
இன்று, சட்டசபை தேர்தலுக்கும் கிட்டத்தட்ட அதே கட்சிகள் கூட்டணியில் நீடிக்கும் நிலையில், தி.மு.க.,- அ.தி.மு.க., போட்டி கடுமையாகி வருகிறது. மாநில பிரச்னைகளை மையப்படுத்தியும், தமிழக அமைச்சர்கள் ஊழலை சுட்டிக்காட்டியும் பிரசாரம் செய்ய, தி.மு.க.,வுக்கு, 'ஐபேக்' நிறுவனம் ஆலோசனை வழங்கியது.
![]()
|
அதையடுத்து, அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் தயாரித்து, கவர்னரிடம் கொடுத்தார் ஸ்டாலின். ஊர் ஊராக சினிமா செட்டப் போல அரங்கு அமைத்து, 'இ.பி.எஸ்., ஊழல்... ஓ.பி.எஸ்., ஊழல்...' என, முழங்கி வந்தார்.
மதுரை மாநாட்டில் அவர் பேச்சு, வேறு பாதைக்கு திரும்பியது. மோடியையும் அவரது அரசையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இ.பி.எஸ்., அவரது அரசு மீதான விமர்சனத்தில் கடுமை குறைந்திருக்கிறது. அதற்கான நேரமும் குறைந்துள்ளது.
தலைவரை பின்பற்றி கட்சியின் மற்ற பேச்சாளர்களும், மத்திய அரசு மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். கந்த சஷ்டி கவசம் விவகாரத்துக்கு பின், 'டிவி' சேனல்களில், பா.ஜ., வை விமர்சிப்பதை தவிர்த்து வந்த, தி.மு.க., பிரதிநிதிகள் மீண்டும், பா.ஜ.,வை கடுமையாக சாட துவங்கி விட்டனர்.
'சைலன்ட் மோடில்' இருந்த மனுஷ்யபுத்திரன் போன்ற, பா.ஜ., எதிர்ப்பு பேச்சாளர்கள், மீண்டும் சேனல்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
தி.மு.க., பிரசார வியூகத்தில் இந்த மாற்றத்துக்கும், ஐ-பேக் கட்டளை தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. அறிவாலயம் வட்டாரத்தில் கிடைத்த தகவல் இது:கவர்னரிடம் கொடுத்த புகார்களில், பெருமளவு டெண்டர் மீதான புகார்களாக உள்ளன. அது, பெரிய அளவில் மக்களை சென்றடையவில்லை. எந்த அரசு இருந்தாலும், டெண்டர் ஊழல் நடக்கத்தான் செய்யும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
சசிகலா வந்ததும், அரசை கவிழ்ப்பார் என எதிர்பார்த்தோம். அதற்காகவே, அ.ம.மு.க.,வையும் தினகரனையும் விட்டு வைத்தோம். ஆனால், சசி படம் ஓடவில்லை. சரி, அவரும் ஜெயலலிதாவும் செய்த ஊழல்களை மக்களுக்கு ஞாபகப்படுத்துவோம் என்று பார்த்தோம். அதுவும் எடுபடவில்லை.
ஊழலை பற்றி, தி.மு.க.,வில் யார் பேசினாலும், மக்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை என்று, ஐ-பேக் லேட்டாக தான் கண்டுபிடித்துள்ளது. வேறு எதை முன்வைத்து பிரசாரம் செய்வது என, அவர்கள் திக்கு முக்காடி கொண்டிருந்த போது தான், பெட்ரோல் விலை, 100 ரூபாயை தொட்டது.
விவசாயிகள் போராட்டமும் மக்களிடம் அதிருப்தியை பரப்புகிறது. ஹிந்தி திணிப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டும் செய்திகளும் வருகின்றன. எனவே, லோக்சபா தேர்தலை போலவே, இதிலும் மோடி எதிர்ப்பு கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில், வியூகத்தை மாற்றி தந்துள்ளது, ஐ-பேக்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE