கோவை:கோவையில் தடுப்பூசி போட்ட இரு குழந்தைகள் பலியானது குறித்து விசாரிக்க, சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை, மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த கார் டிரைவர் பிரசாந்தின், மூன்று மாத குழந்தை கிஷாந்துக்கு, 17-ம் தேதி, அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போட்டனர். மூன்று மணி நேரத்துக்குப் பின், குழந்தை இறந்தது.இதேபோல், சவுரிபாளையத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் என்ற, இரண்டரை மாத குழந்தையும், நகர்ப்புற சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்ட பின் உயிரிழந்தது.
குழந்தை கிஷாந்த், நிமோனியாவால் உயிரிழந்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். மற்றொரு குழந்தை இறப்புக்கான காரணம் தெரியவில்லை. குழந்தைகள் இறப்பு குறித்து விசாரிக்க, சிறப்புக் குழு நியமக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:அன்றைய தினம் தடுப்பூசி போட்ட, 40 குழந்தைகளுக்கு பாதிப்பு இல்லை. அவ்விரு மையத்தில் போடப்பட்ட தடுப்பூசிக்கான பேட்ஜில் இருந்த மருந்து, பல்வேறு பகுதிகளில் குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது; எங்கும் புகார் இல்லை. இருப்பினும், இரு குழந்தைகள் இறப்பு தொடர்பாக விசாரிக்க, சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழு அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசியில் எவ்வித பிரச்னையும் இல்லை. தடுப்பூசியில் பிரச்னை இருந்தால், அதன் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும். குழந்தைகள் இறப்புக்கும், தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை. இருப்பினும், தடுப்பூசிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு உள்ளன. இரு வாரங்களுக்கு, தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE