தேனி:'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கேரள மாநில இடைத்தரகர் ரஷீத்தின் நீதிமன்ற காவலை மார்ச் 4 வரை நீடித்து, தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டது குறித்து 2019 செப்டம்பரில் தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் சென்னை மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் உட்பட 17 பேர் கைதானார்.
மாணவர் ரிஷிகாந்த் முன்ஜாமின் பெற்றார். கேரள இடைத்தரகர் ரசீத் 45, 2021 ஜன., 7ல் தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு 3 முறை நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில், காவல் முடிந்து, நேற்று தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ரஷீத் சார்பில், வழக்கறிஞர் திருமலை, சி.பி.சி.ஐ.டி., தரப்பில் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி ஆஜரானார். நீதிபதி பன்னீர்செல்வம், 'நீதிமன்ற காவலை மார்ச் 4 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
முன்னதாக தேனி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி விஜயா முன், வழக்கறிஞர் திருமலை தாக்கல் செய்த ஜாமின் மனு விசாரணையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், ''நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியாக ரஷீத் இருப்பதாலும், இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் பலரை தேடி வருவதாகவும், விசாரணை நிலுவையில் இருப்பதால் ஜாமின் அனுமதிக்கக்கூடாது'' என, தெரிவித்தனர்.
அதனடிப்படையில் முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா, 'ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ரஷீத் ஜாமின் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு பிப்.,22ல் விசாரணைக்கு வர உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE