தேக்கடி:பெரியாறு அணையில் நேற்று ஆய்வு நடத்திய மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழு ஷட்டர்கள் இயக்கி பார்த்தது.
பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்ற பரிந்துரைப்படி மூவர் அடங்கிய மத்திய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆண்டுதோறும் அணையில் ஆய்வு மேற்கொண்டு வழங்கும் ஆலோசனைப்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.குழு தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார்.
உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன், கேரள அரசு சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் செயலர் பிரணாப் ஜோதிநாத் உள்ளனர்.நேற்றைய ஆய்வில் மணிவாசன் பங்கேற்காத நிலையில் அக்குழு மெயின் அணை, பேபி அணை, நீர்க்கசிவு காலரி, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டது.
காலரியில் கசிவுநீர் சோதனைக்காக கேன்களில் சேகரிக்கப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா மின்சாரம் வழங்கிய நிலையில் 13 ஷட்டர்களில் 3, 4வது ஷட்டர்கள் இயக்கி பார்க்கப் பட்டது. ஆய்வுக்குப்பின் தேக்கடியில் தமிழக, கேரள அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதன்பின் மத்திய கண்காணிப்பு குழு தலைவர் குல்சன்ராஜ் கூறுகையில், ''பெரியாறு அணை பலமாக உள்ளது. அணையையொட்டிய பேபி அணையை பலப்படுத்த அங்குள்ள மரங்களை வெட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அணையில் 142 அடி தேக்க காலநிலை(ரூல்கர்வ்) குறித்து இரு மாநில அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
மத்திய நீர்வள கமிஷனின் ஆலோசனைக்கு பின் முடிவு எடுக்கப்படும். அணைக்கு மின்சார இணைப்பு கொடுத்தது திருப்திகரமாக உள்ளது'' என்றார்.காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணி, தலைமை பொறியாளர் செல்வராஜ், மதுரை கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், செயற்பொறியாளர் ஷாம் இர்வின், கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் பினு பேபி, துணைக்குழு தலைவர் சரவணகுமார் மற்றும் தமிழக, கேரள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE