மதுரை:மதுரை, எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த செல்வகுமார் தாக்கல் செய்த மனு:
ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை, மாவட்ட அமைப்பாளராக உள்ளேன். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டும் பணி நடக்கிறது. அதற்காக, உலகம் முழுதும் ஹிந்துக்களிடம் நிதி உதவி பெறும் பணியில், அறக்கட்டளை ஈடுபட்டு உள்ளது.நிதி சேகரிக்க மதுரையில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ராமர், சீதாதேவி, ஆஞ்சநேயர் விக்ரகங்கள் கொண்ட ரதத்தை இயக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
ரதயாத்திரை, 100 வார்டுகளிலும் நடைபெற பிப்., 19 முதல் பிப்., 27 வரை அனுமதி கோரி, மதுரை போலீஸ் கமிஷனர், திலகர் திடல் உதவி கமிஷனரிடம் மனு அளித்தோம். 'கொரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை கருதி, ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது' என உதவி கமிஷனர் உத்தரவிட்டார்.
பள்ளி, கல்லுாரி, சினிமா தியேட்டர், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசியல் மாநாடுகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. அரசியல் காரணங்களால், சரியாக மனதை செலுத்தாமல் ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்தது ஏற்புடையதல்ல. உதவி கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து, அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்.நீதிபதி, 'அனுமதி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை போலீஸ் கமிஷனர் உடனடியாக பரிசீலித்து, நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க வேண்டும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE