ராஞ்சி: மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின், 'ஜாமின்' மனுவை, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தற்போது, உடல்நலக் குறைவு காரணமாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மொத்தமுள்ள நான்கு ஊழல் வழக்குகளில், மூன்றில் லாலுவுக்கு ஜாமின் வழங்கி, நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. நான்காவது வழக்கான தும்கா கருவூல வழக்கில் ஜாமின் கோரி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில், லாலு மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, நீதிபதி அபரேஷ் குமார் சிங் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அவர் உத்தரவிட்டதாவது: தும்கா கருவூல வழக்கில், லாலுவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையில், 50 சதவீதம் முடிவடைய, இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதற்கு முன்னதாக, ஜாமின் வழங்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு பின், புதிதாக ஜாமின் மனு தாக்கல் செய்யலாம். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.இதையடுத்து, மூன்று வழக்கில் ஜாமின் பெற்றும், சிறையில் இருந்து லாலு வெளிவர முடியாத நிலை உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE