தியாகதுருகம் : தியாகதுருகம் வாரசந்தை குத்தகை எடுப்பதில் ஏற்பட்ட கடும் போட்டியால் 47 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே சனிக்கிழமை தோறும் வாரச் சந்தை நடக்கிறது. 100 ஆண்டுகள் பழமையான இச்சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி கால்நடைகள் விற்பனையும் அதிகம் நடக்கும். சுற்று வட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு பொருட்களை வாங்க வருகின்றனர். ஆடு, மாடுகள் அதிக அளவில் விற்பனையாகும்.வாரச் சந்தைக்கு வரும் கால்நடைகள், கடைகள், வாகனங்களுக்கு சுங்க வசூல் செய்யும் குத்தகை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தனியாருக்கு பொது ஏலம் விடப்படுகிறது.
கடந்த 2015 ம் ஆண்டு வரை ஏலம் எடுப்பவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்ததால் குறைந்த தொகைக்கு குத்தகை எடுக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு அரசியல் கட்சியினருக்கு இடையே சந்தை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி ஏற்பட்டது.சந்தை ஏலம் எடுப்பதை கவுரவமாக கருத தொடங்கியதால் ஏலத்தொகை பற்றி கவலைப்படாமல் அதிக தொகைக்கு குத்தகைக்கு எடுத்து 'கெத்து' காட்டினர்.இதன் காரணமாக கடந்த 2018 ம் ஆண்டு நடந்த குத்தகை அதற்கு முந்தைய தொகையான 5 லட்ச ரூபாயில் இருந்து உயர்ந்து 30 லட்சம் ரூபாய்க்கு சந்தை ஏலத்தொகை புதிய உச்சத்தை தொட்டது.
இந்நிலையில் வரும் மார்ச் 31ம் தேதியோடு குத்தகைக் காலம் முடிவதால் தியாகதுருகம் பேரூராட்சியில் நேற்று புதிய குத்தகைக்கான ஏலம் விடப்பட்டது. கடந்த முறை போல் போட்டி பலமாக இருக்கும் என்பதால் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.செயல் அலுவலர் மல்லிகா தலைமையில் வடக்கனந்தல் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம், சின்னசேலம் பேரூராட்சி செயலாளர் சந்திரகுமார் முன்னிலையில் நேற்று முன்தினம் 11:00 மணிக்கு ஏலம் தொடங்கியது. வாரச் சந்தை சுங்க வசூல் குத்தகை எடுக்க ஆரம்பத் தொகையாக 38 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. சின்னதுரை, கோவிந்தராஜ், சிவக்குமார், சங்கர், ஆரிப்லால் ஆகியோர் ஏலத்தில் பங்கேற்றனர்.
ஒருவருக்கொருவர் போட்டி போட்டு ஏலத்தொகையை உயர்த்தினர்.அதன் முடிவாக 47 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு வாரசந்தை சுங்க வசூல் குத்தகையை ஆரிப்லால் ஏலம் எடுத்தார்.அதைத் தொடர்ந்து வாரச் சந்தை நடக்கும் சனிக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் சாலையோர கடை மற்றும் வாகனங்கள் சுங்க வசூல் செய்யும் குத்தகை ஏலம் தொடங்கியது.ஆரம்பத் தொகை 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. சங்கர், ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ஏழுமலை, ராஜேந்திரன் ஆகியோர் ஏலத்தில் பங்கேற்றனர்.இவர்களுக்குள் ஏற்பட்ட கடும் போட்டியால் கடந்த முறையை விட நான்கரை மடங்கு ஏலத்தொகை உயர்ந்தது.முடிவில் 16 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு ராஜேந்திரன் ஏலம் எடுத்தார்.அதன்பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறை குத்தகை ஏலம் விடப்பட்டது. ஆரம்பத் தொகை 3 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. பெரியசாமி, மாயகண்ணன் ஆகியோர் ஏலத்தில் பங்கேற்றனர். முடிவில் 4 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு பெரியசாமி ஏலம் எடுத்தார்.அதேபோல் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கான ஏலம் விடப்பட்டது.இதில் பேரூராட்சி சார்பில் அதிக வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதால் கடையை ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் கடைகளுக்கு மட்டும் ஏலம் விடப்படவில்லை.வாரச்சந்தை எடுத்து நடத்துவதில் ஏற்பட்ட போட்டா போட்டியால் ஜி.எஸ்.டி., வரி உள்பட ஏலம் எடுத்த தொகை அரை கோடியை ரூபாயை தாண்டியது பொதுமக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE