புதுச்சேரி : சென்னையில் கொலை செய்யப்பட்ட ரவுடி ஜெரோம் பிரபு வழக்கில் தேடப்பட்ட 5 பேர், புதுச்சேரியில் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை, அவ்வை நகர் 13வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவுடி ஜெரோம் பிரபு, 36; எதிராளிகளால் தனக்கு ஆபத்து வரும் என பயந்து, தனது மனைவி குழந்தைகளை, சென்னை, நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, புதுகணேசன் நகரில் வாடகை வீட்டில் தங்க வைத்து, தலைமறைவாக இருந்தார்.நேற்று முன்தினம் நீலாங்கரை வீட்டிற்கு வந்த ஜெரோம்பிரபுவை மர்ம கும்பல், வெட்டி கொலை செய்து தப்பித்தது. நீலாங்கரை போலீசார் வழக்கு பதிந்தனர்.
விசாரணையில், கடந்த 2019 நவ. 10 ம் தேதி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி அன்புரஜினி, வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான ஜெரோம்பிரபு, ஜாமினில் வெளியே வந்துள்ளார். அன்புரஜினி கொலைக்கு பழி தீர்க்க, அவரது சகோதரர் ஜெரிக்கோ மற்றும் ஆதரவாளர்கள் சேர்ந்து ஜெரோம்பிரபுவை வெட்டி கொலை செய்து புதுச்சேரியில் பதுங்கியது தெரிந்தது.
நீலாங்கரை உதவி ஆணையர் தமிழன்பன் தலைமையிலான இரு தனிப்படை போலீசார் புதுச்சேரி லாஸ்பேட்டையில் பதுங்கியிருந்த அசோக் நகர் உதயா (எ) உதயகுமார், 32; கீழ்புத்துப்பட்டு ஜெராவிமல்ராஜ், 24; ரெட்டியார்பாளையம் விக்கி(எ) விக்னேஷ்வரன், 24; சின்ன காலாப்பட்டு கவுதமன், 25; சென்னை ஈச்சம்பாக்கம் துரை மணிகண்டன், 32; ஆகியோரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து சென்றனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE