புதுச்சேரி : புதுச்சேரியில் மேலும் 3 எம்.எல்.ஏ.,க்கள் காங்., கட்சியில் இருந்து விலக உள்ளனர் என பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் கூறினார்.
கட்சி அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:புதுச்சேரி பா.ஜ., சார்பில் வரும் 25ம் தேதி ஏ.எப்.டி. திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களும் பங்கேற்கலாம்.முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து பொய் கூறி வருகிறார். இப்போது, கூட மெஜாரிட்டியை நிரூபிப்போம் என கூறியுள்ளார். காங்., கட்சியில் இருந்து மேலும் 3 எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலக தயாராக உள்ளனர். பா.ஜ.,வில் சேர்ந்தவர்களுக்கு எந்த நிபந்தனைகளும் வைக்கவில்லை.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் மாநில வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையில், பா.ஜ.,விற்கு வருகின்றனர். நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்க வில்லை.பல மாநிலங்களில் காங்., அழிந்ததற்கு அக்கட்சியே காரணம். நாராயணசாமி ஒன்மேன் ஆர்மி போல செயல்படுகிறார். தனக்கு பிடிக்காதவர்களை கட்சியை விட்டு அனுப்பி விடுவார். நாராயணசாமி வீட்டிற்கு செல்ல வேண்டும் என காங்., எம்.எல். ஏ.,க்களே நினைக்கின்றனர்.
நமச்சிவாயம், தனவேலு உள்ளிட்ட பெரும்பான்மை சமுதாயத்தினரை பழி வாங்கியுள்ளார். புதுச்சேரியில் காங்., கட்சியை சேர்ந்த கடைசி முதல்வராக நாராயணசாமி தான் இருப்பார். கண்டிப்பாக வரும் 22ம் தேதி காங்., இல்லாத புதுச்சேரி உருவாகும்.நியமன எம்.எல்.ஏ.க்கள், நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஓட்டளிக்கலாம் என சுப்ரீம் கோர்ட், தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது. கண்டிப்பாக நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்போம்.முதல்வர் நாராயணசாமி, தன் கட்சி தலைவரிடமே பொய் கூறியவர். சுப்ரீம் கோர்ட்டை எதிர்த்து சபாநாயகர் செயல்பட்டால், அவருக்கு எதிராக உரிமை மீறல் கொண்டு வருவோம். எனவே, நாராயணசாமியும், அரசும் தப்பிக்க முடியாது. ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக தேசிய தலைமை முடிவு செய்யும்.பா.ஜ., எந்த அரசையும் கலைத்ததாக சரித்திரம் இல்லை. பா.ஜ.,விற்கு யாரையும் மிரட்ட வேண்டிய அவசியமில்லை. காங்., எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு வெளியேறுவதால் தான் ஆட்சி கவிழ உள்ளது. தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை தக்க வைக்க முடியாத முதல்வர், மற்றவர் மீது குற்றம் கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE