சென்னை : ''போலீஸ் பணி, கடவுளுக்கு மிகவும் நெருக்கமானது,'' என, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியும், தமிழக பா.ஜ., துணை தலைவருமான அண்ணாமலை தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர், அண்ணாமலை. 2011ல், ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், கர்நாடக மாநிலத்தில், 2019 வரை பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றார். அம்மாநிலத்தில், மிகவும் துணிச்சலுடன் பணியாற்றியதால், 'காவல் துறையின் சிங்கம்' என, அழைக்கப்பட்டார். இவர், தன் பணிக்காலத்தில் எதிர்நோக்கிய சவால்கள், சந்தித்த மனிதர்கள், போலீசாரின் அன்றாட பணிகள், அவர்களுக்குள் இருக்கும் மனிதநேயம் என, பசுமையான நினைவுகளை தொகுத்து, 'காக்கி' என்ற, புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, சென்னை, அடையாறில் உள்ள, ஒடிசி புத்தக விற்பனை நிலையத்தில், நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்றோர், 'காவல் துறையில் பணியாற்றிய போது மறக்க முடியாத சம்பவம்; அரசியலுக்கு எதற்காக வந்தீர்கள்?' என்பது உள்ளிட்ட கேள்விகளை கேட்டனர். அவற்றுக்கு பதில் அளித்து, அண்ணாமலை பேசியதாவது:

கோவையில், கல்லுாரி படிப்பை முடித்து, உ.பி., மாநிலம், லக்னோவில் உள்ள, ஐ.ஐ.எம்.,மில், உயர் கல்வி படித்தேன். அப்போது, 2008, நவம்பர், 26ல், மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம், என்னை உலுக்கியது. இச்சம்பவம், என்னுள் பல கேள்விகளை எழுப்பியதால், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி, ஐ.பி.எஸ்., அதிகாரியானேன். கல்வி, சமூக மாற்றம், பொருளாதார நிலை, தனி மனித ஒழுக்கம், அரசியல்வாதிகள் அட்டூழியங்கள் குறித்து, நான் சிந்திக்காத நாட்களே இல்லை.
இங்கு மாற்றம் என்பது, காலத்தின் கட்டாயம். போலீஸ் பணி, கடவுளுக்கு மிகவும் நெருக்கமானது. ஆனால், போலீசாருக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் நீண்ட இடைவெளி இருக்கும். போலீஸ்காரர்கள், ஒரு நாளைக்கு, 18 மணி நேரம் உழைப்பர். இது, ஏழு நாளும் தொடரும்.இந்த பணிச் சுமையை குறைக்க வேண்டும். வெளிநாடுகளில் இருப்பதை போல, போலீசாருக்கு, 8 மணி நேர வேலை என்பதை, நிர்ணயம் செய்ய வேண்டும். சம்பள உயர்வு வழங்க வேண்டும். அவர்களின் உடல் நலம் காக்க வேண்டும். அப்போது தான், சமூகம் சிறந்து விளங்கும். இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE