சென்னை:சேலம், கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரிய மனு மீது, ஆறு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், கன்னன்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:சேலத்தில் இருந்து, 14 கி.மீ., தொலைவில் உள்ள கஞ்சமலையில், சித்தேஸ்வரசாமி கோவில் உள்ளது. மலை மேல் சிவன் கோவிலும், அடிவாரத்தில்காளங்கிநாதர் சித்தர் கோவிலும் உள்ளது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள்,இந்த கோவிலுக்கு வருவர்.கோவிலுக்கு வர, போக்குவரத்து வசதி சரியாக இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கோவில் சொத்துக்களை பாதுகாக்கவும், கோவிலைச் சுற்றி அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும்படி கோரினேன்.முதல்வருக்கு மனு அளித்தேன். கோவில் சொத்துக்களுக்கு உரிய பாதுகாப்பும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, சேலம் கலெக்டர், அறநிலையத் துறை இணை ஆணையர், வனத் துறை செயலர் ஆகியோர் சேர்ந்து வழி காண வேண்டும்.உள்ளூர் போலீசாரும், குழுவில் இடம்பெற வேண்டும்.கடந்த, 2015 ஜனவரி, 2018 ஆகஸ்ட்டில், மனுதாரர் அளித்த மனுக்களின் நகலை, உடனடியாக அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். அந்த மனுக்கள் மீது தேவையான உத்தரவுகளை, ஆறு வாரங்களில் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE