இப்படி 'பல்டி' அடிக்கலாமா?
புதுச்சேரி காங்கிரஸ் சார்பில், ஏ.எப்.டி., திடலில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'புதுச்சேரி மாநிலம், வெளியில் இருந்து வந்து அமர்ந்திருப்பவர்களுக்கு ஒருபோதும் சொந்தமாகாது. புதுச்சேரி யாருடைய தனிப்பட்ட சொத்தும் கிடையாது. புதுச்சேரியின் எதிர்காலத்தை, மண்ணின் மைந்தர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர், 'இதைத் தான், பா.ஜ.,வும் சொன்னது... இத்தாலியில் பிறந்த சோனியா, நம் மண்ணை ஆளலாமா என்று... காங்கிரஸ் இப்படி, 'பல்டி' அடிக்கலாமா?' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
'சரியாகத் தான் பேசுறாரு!'
த.மா.கா., கட்சி துணைத் தலைவர் ஞானதேசிகனின் படத்திறப்பு விழாவிற்காக, அக்கட்சித் தலைவர் வாசன், சமீபத்தில் மதுரை வந்தார்.அப்போது நடந்த, 'பிரஸ் மீட்'டில், நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க., கூட்டணியில், உங்கள் கட்சிக்கு, ஏழு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய போவதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவுகிறதே...' என கேட்டதற்கு, வாசன், 'நான் எப்போதும் சமூக வலைதளங்களில் வரக்கூடிய செய்திகளை நம்புபவன் கிடையாது' என்றார்.'பிரஸ் மீட்' முடிந்ததும், கேள்வி கேட்ட நிருபரை அழைத்து வருமாறு, கட்சி நிர்வாகிகளிடம் வாசன் கூறினார். நிருபர் வந்ததும், வாசன், 'ஒரு சின்ன திருத்தம். சமூக வலைதளங்களில் வரக்கூடிய அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டும் நம்புபவன் என, எழுதிக் கொள்ளுங்கள்' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'பரவாயில்லை... எதை எப்படி சொல்ல வேண்டும் என, வாசனுக்கு தெரிகிறது... அதனால் தான், 'நெட்டிசன்'கள் யாரும் இவரை கிண்டல் செய்வதில்லை...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.
'ரோபோ' ஸ்டாலின்!
தர்மபுரி, தி.மு.க., அலுவலகத்தில் நடந்த ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் மகளிரணி செயலர் கனிமொழி பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'அ.தி.மு.க., அரசை, பா.ஜ., தான் நிர்வகிக்கிறது. அ.தி.மு.க.,வில் யாரை சேர்க்க வேண்டும் என, மோடியும், அமித் ஷாவும் தான் முடிவு செய்கின்றனர்...' என்றார். கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், 'மத்திய அரசின் தயவு தேவை என்பதால், அப்படி நடக்கின்றனர்... நம் கட்சித் தலைவர் ஸ்டாலினோ, 'ஐபேக்' எனும் கம்பெனி ஆட்கள் சொல்லுறபடி நடந்து, பேசி, 'ரோபோ' போல இருக்கிறார்... இதுக்கு, இ.பி.எஸ்., எவ்வளவோ பரவாயில்லை...' என்றதும், அருகிலிருந்தோர் அதை
ஆமோதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE