ஆரம்பமே அதிரடி!
'கடைசி வரை இப்படியே இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், நம் நாட்டு அரசியல்வாதிகளை நம்ப முடியாதே' என, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மாநகராட்சி மேயர் விஜயலட்சுமியைப் பற்றி பேசுகின்றனர், அந்த மாநில மக்கள். சில மாதங்களுக்கு முன் நடந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தல், நாடு முழுதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில், பா.ஜ., வெற்றி பெறும் என, அரசியல் நிபுணர்கள் கூறினர். கடைசியில், மிக குறைந்த வார்டுகள் வித்தியாசத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி, மாநகராட்சியை கைப்பற்றியது.மேயராக, ஆளும் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரது மகள் விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.
'கடந்த, 18 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து விட்டு, சமீபத்தில் ஐதராபாத் திரும்பிய பெண்ணுக்கு, மேயர் பதவி கொடுப்பது ஏன்' என, சிலர் கேள்வி எழுப்பினர். ஆனாலும், கட்சிக்குள் பல மூத்த தலைவர்கள் விஜயலட்சுமியை ஆதரித்தனர். மேயர் பதவியில் அமர்ந்ததுமே, அவருக்கு, 'ஜால்ரா'க்கள் அதிகரித்து விட்டனர். ஐதராபாத் நகரம் முழுதும், விஜயலட்சுமியை வாழ்த்தி, ஆயிரக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டன. இதைப்பார்த்த விஜயலட்சுமி, 'சட்டவிரோதமாக பேனர் வைத்தால், ௩ லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, அதிரடியாக அறிவித்தார். அடுத்த நாளே, பேனர்கள் மாயமாகிவிட்டன.'ஆரம்பமே அதிரடியாக இருக்கிறதே... இந்த அதிரடியை விஜயலட்சுமி தொடருவாரா' என, ஆவலுடன் கேட்கின்றனர், ஐதராபாத் மக்கள்.
காலம் கடந்து விட்டது!
கூடாரம் காலியாவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் அவசரம் அவசரமாக இறங்கியுள்ளார், காங்கிரஸ் எம்.பி., ராகுல். சமீபத்தில், ராஜ்யசபாவில் குலாம்நபி ஆசாத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவு உபசார விழாவில் நடந்த உருக்கமான நிகழ்வுகளே, ராகுலின் இந்த அவசர நடவடிக்கைகளுக்கு காரணம். குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட, காங்., மூத்த தலைவர்கள் சிலர், கட்சி மேலிடத்துக்கு எதிராக, சில மாதங்களுக்கு முன் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தனர். இந்த சம்பவத்திலிருந்தே, குலாம்நபிக்கும், கட்சி மேலிடத்துக்கும் இடையேயான விரிசல் அதிகரித்து விட்டது. ராஜ்யசபாவில், ஆசாத்தை, பிரதமர் மோடி புகழ்ந்து பேசி, கண்ணீர் சிந்தியதும், அதற்கு நன்றி தெரிவித்து, ஆசாத் கண்ணீர் சிந்தியதும், காங்கிரஸ் தலைவர்கள் வயிற்றில் புளியை கரைத்து விட்டது.
ஆசாத், எப்படியும் கட்சியிலிருந்து ஓடி விடுவார் என, ராகுலுக்கு தெரிந்து விட்டது. இதையடுத்து, அதிருப்தியில் உள்ள மற்ற தலைவர்களை சமாதானப்படுத்தி, தக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ராகுல்.சமீபத்தில், ஆனந்த் சர்மாவின் தாயார் இறந்து விட்டார். இதற்கான இரங்கல் கூட்டத்துக்கு சென்ற ராகுல், ஒரு மணி நேரத்துக்கு மேலாக, அங்கிருந்து, ஆனந்த் சர்மாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட, அதிருப்தியில் உள்ள மற்ற தலைவர்கள், 'இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். இப்போது காலம் கடந்து விட்டது' என, விரக்தியுடன் கூறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE