தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: உங்களின் கோரிக்கைகளை தெரிவித்துள்ளீர்கள்; அவற்றை பதிவு செய்துள்ள தோழர்கள் கொடுத்துள்ள ஒப்புகை சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இன்னும், மூன்று மாதங்களில், தி.மு.க., ஆட்சி அமையும் போது, 100 நாட்களில் உங்கள் கோரிக்கை தீர்க்கப்படும். ஒருவேளை தீர்க்கப்படாவிட்டால், இந்த ஒப்புகை சீட்டுடன் சென்னை வந்து, கோட்டையில் என்னை பார்க்க, இந்த சீட்டை பயன்படுத்த முடியும். அதனால் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்!
'டவுட்' தனபாலு: அடுத்து அமைவது, தி.மு.க., ஆட்சி தான் என, எந்த உறுதியில் இப்படி வாக்குறுதி அளிக்கிறீர்களோ என்ற, 'டவுட்' வருது. மேலும், கோட்டைக்கு வந்து தன்னை பார்க்கவும், இந்த ஒப்புகை சீட்டை பயன்படுத்தலாம் என, நீங்கள் கூறியிருப்பது, சற்று ஓவரோ என்ற, 'டவுட்'டையும் கிளப்புது. ஏனெனில், புதிதாக அரசு அமைந்ததும், கோட்டையை சுற்றி, ஆயிரக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டு, யாரும் எளிதாக அணுக முடியாத நிலை ஏற்படுமே!
தமிழக காங்., தலைவர் அழகிரி: 234 தொகுதிகளிலும், காங்., சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனுக்களை, 100 ரூபாய் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை, 5,000 ரூபாயுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: கட்சி துவக்கி, வெற்றிகரமாக நடத்துவது நல்ல பிசினஸ் என்பதை, தமிழக கட்சிகள் நிரூபித்து வருகின்றன. எனினும், தமிழக காங்., நியாயமாக பிசினஸ் செய்யும் கட்சி என்பதை, பலருக்கும், 'டவுட்' இன்றி உணர்த்துகிறது. ஏனெனில், விருப்ப மனுவுக்கும் குறைந்த கட்டணம், விண்ணப்பத்திற்கும் குறைந்த கட்டணம் வசூலிக்கிறதோ... தி.மு.க., - அ.தி.மு.க., - ம.நீ.ம.,வில் அவை, 25 ஆயிரம் ரூபாய்!
இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராடியதற்காக போடப்பட்ட வழக்குகளில், போலீசாரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகளைத் தவிர, மற்ற, பத்து லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
'டவுட்' தனபாலு: 'ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் வரும்... அதற்கு இடையே, உள்ளாட்சி தேர்தல் வரும்... அதுபோக, கூட்டுறவு சங்க தேர்தல் போன்ற பல தேர்தல்கள் வரும்.,. எனவே, நம் மீது போடப்படும் வழக்குகள் வாபஸ் பெறப்படும்' என்ற எண்ணத்தை, முதல்வரின் அறிவிப்பு, அடுத்து போராட உள்ளவர்களுக்கு ஏற்படுத்தி விடுமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ஏனெனில், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட காலத்தில், அரசுகளே ஸ்தம்பித்து நின்றன; மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதை யாராலும் மறக்க முடியாது!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: வதந்தி, அவதுாறு பரப்பி, சதித்திட்டம் தீட்டி, தமிழகத்தில் காலுான்ற, சனாதன சக்திகள் முயற்சிக்கின்றன. அவர்களை அடிக்கும் அடியில், தமிழகம் பக்கமே அவர்கள் தலை வைத்து படுக்கக் கூடாது.
'டவுட்' தனபாலு: தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும்,'முக்கிய' கட்சி ஒன்றின் தலைவரான நீங்கள், ஒரு தரப்பினரை அடிக்கச் சொல்லி, ஒன்றும் தெரியாத, அப்பாவி தொண்டர்களை துாண்டி விடலாமா... இப்படி கேட்டால், 'ஓட்டால், கருத்தால், பதிலால் அடிக்கச் சொன்னேன்' என்பீர்கள். எப்படியோ, இப்படி பேசிய பலர், இருந்த இடம் தெரியாத நிலைக்கு வந்து விட்டனர். உங்களுக்கும் அந்நிலை தானோ என்ற, 'டவுட்' வருகிறது!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்: மது விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டிய அவசியமில்லை. இதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து, இலக்கு நிர்ணயித்து, விற்பனையை பெருக்க வேண்டிய தேவையில்லை. மதுவால் வரும் வருமானம், அரசுக்கு அவமானம்.
'டவுட்' தனபாலு: மதுக்கடைகள் மற்றும் மது விற்பனையை சீரமைக்க அரசு தலையிடாமல் இருந்தாலோ அல்லது அரசு அதிகாரிகள் ஈடுபடாமல் இருந்தாலோ, கிராமங்களிலும், நகரங்களிலும் திடீர் பண்ணையார்கள் பலர் தோன்றி விடுவர். ரவுடியிசம் பெருகி விடும். உ.பி., - ம.பி.,யில் முன்னர் இருந்தது போல, தாதாக்கள் பெருகி விடுவர். இதை அறிந்தும், ஓட்டுக்காகத் தான், மது விவகாரத்தில் அரசு தலையிடுவதை எதிர்க்கிறீர்களோ என்ற, 'டவுட்' மது பிரியர்களுக்கு வந்து விட்டது!
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: புதுச்சேரியில் மீண்டும், எம்.ஜி.ஆர்., ஆட்சி அமையும். அ.தி.மு.க., துவக்கப்பட்டதும், முதலில், எங்கள் கட்சி, புதுச்சேரியில் தான் ஆட்சியை பிடித்தது. அந்த நிலை மீண்டும் ஏற்படும்.
'டவுட்' தனபாலு: அந்த நிலை எப்போது ஏற்படும் என நீங்கள் சொல்லவில்லை. ஒரு வேளை இந்த தேர்தலில் நடந்து விட்டால், தி.மு.க., பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர், பொது மேடையில் தற்கொலை செய்து கொள்வேன் என அறிவித்துள்ளாரே... அநியாயமாக ஒரு உயிர் பறி போய் விடுமோ என்ற, 'டவுட்' உங்கள் பேச்சால் வருகிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE