உஷாரய்யா உஷாரு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

உஷாரய்யா உஷாரு!

Added : பிப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
உஷாரய்யா உஷாரு!என்.சிவசுந்தர பாரதி, காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: ரூபாய் நோட்டுகளில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படம் இடம்பெறக் கோரிய வழக்கில், மத்திய அரசு பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.நேதாஜியின் தியாகத்தை, இந்நாடு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். ஆனால், ரூபாய் நோட்டுகளில், அவரின் படம் இடம்பெறுவது என்பது, அவ்வளவு


உஷாரய்யா உஷாரு!என்.சிவசுந்தர பாரதி, காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: ரூபாய் நோட்டுகளில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படம் இடம்பெறக் கோரிய வழக்கில், மத்திய அரசு பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.நேதாஜியின் தியாகத்தை, இந்நாடு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். ஆனால், ரூபாய் நோட்டுகளில், அவரின் படம் இடம்பெறுவது என்பது, அவ்வளவு சாத்தியமானது அல்ல.ரூபாயில், தேச தந்தை காந்தியடிகளின் படம் இருப்பது தான், சிறப்பு. அவரின் அகிம்சை, உலகம் முழுதும் பரவ வேண்டும்.ரூபாய் நோட்டில், நேதாஜி படம் அச்சடிக்க அனுமதி அளித்தால், அதை தொடர்ந்து அம்பேத்கர், நேரு உள்ளிட்டோரின் படங்களும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை எழும். அதை, தவிர்க்க முடியாது.
தியாகிகளின் படங்களைத் தொடர்ந்து ஜெயலலிதா, கருணாநிதியின் படங்களும் இடம்பெற வேண்டும் என கழகத்தினர், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பரே... அதை எப்படி தடுப்பது?
ரூபாய் நோட்டில், பிற தலைவர்களின் படம் அச்சிட வேண்டும் என்ற கோரிக்கை, ஆபத்தில் முடியலாம்; உஷார்!


தே.மு.தி.க.,வின் லட்சணம் தெரியும்!எஸ்.முருகேசன், திருத்தங்கல், விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு தரும் முக்கியத்துவத்தை, எங்களுக்கு தரவில்லை' என, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா குறைப்பட்டுள்ளார். அவர், பழைய கதையை மறந்து விட்டார் போலும்!பிரேமலதா, 2011 தேர்தலில் நடந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த தேர்தலில், தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்து, 45 தொகுதி கொடுத்தார், ஜெயலலிதா. அதில், 29 தொகுதிகளில் வெற்றி பெற்ற, தே.மு.தி.க.,வுக்கு, சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது.எதிர்க்கட்சி தலைவராக எப்படி நடந்து கொண்டார் விஜயகாந்த்? ஜெ., யை பார்த்து நாக்கை துருத்தி, விரல் நீட்டி பேசினார்; நாகரிகம் இல்லாமல் நடந்து கொண்டார். அதனால், கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.கடந்த, 2016 தேர்தலில், தே.மு.தி.க., தலைமையில், மக்கள் நலக் கூட்டணி ஏற்படுத்தினர். மக்கள், அந்த மூன்றாவது அணியை ஆதரிக்கவில்லை. ஒரு இடத்தில் கூட, அந்த கூட்டணி வெற்றி பெறவில்லை.
இது தவிர, எந்த தேர்தல் நடந்தாலும், அ.தி.மு.க.,விடமும், தி.மு.க.,விடமும் பேரம் பேச வேண்டியது. எப்படி, தே.மு.தி.க., மீது மரியாதை ஏற்படும்?இந்த லட்சணத்துடன் இருக்கும் தே.மு.தி.க.,வின் பொருளாளர் பிரேமலதா, அ.தி.மு.க.,வை குறை கூறி என்ன பிரயோஜனம்?


நமக்கு தேவை விளம்பரம்!நாகராணி அருண், உடுமலை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'என்னமா நடிக்கிறாங்கப்பா...' என, ஆச்சரியப்பட செய்கின்றனர், தி.மு.க.,வினர்.ஈ.வெ.ரா., வழியில், காலம் காலமாக, ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி வந்த, தி.மு.க.,வினர், இப்போது ஆத்திக வேஷம் கட்டியுள்ளனர். காரணம், வரவுள்ள சட்டசபை தேர்தல்!ஸ்டாலின், வேல் வாங்கியபடி, 'போஸ்' கொடுப்பதும், அவரது மகன் உதயநிதி, ஆதீனத்திடம் ஆசி பெறுவதும் ஒரே கூத்து தான். இதெல்லாம்,
'பக்கா ப்ளான்' என்பது அனைவருக்கும் தெரியும்.ஸ்டாலின் மனைவி துர்கா, முன்பெல்லாம் கோவிலுக்கு சென்றால், அதை யாரும் புகைப்படம் எடுத்து விடக்கூடாது என்பதில், தி.மு.க.,வினர் மிக கவனமாக இருப்பர். ஆனால் இன்று, கோவிலில் அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவதே, தி.மு.க.,வினர் தான். 'ஐபேக்' நிறுவனத்தின் இயக்கம், தி.மு.க.,வில் நன்கு வேலை செய்கிறது. எவ்வகையிலாவது, ஸ்டாலினுக்கு விளம்பரம் வேண்டும் என்பதில், அந்த நிறுவனம் தெளிவாக உள்ளது.நெல்லை பத்தமடை பரமசிவம் வீட்டிற்கு, ஸ்டாலின் சென்றதும், ஐபேக் நிறுவனம் அரங்கேற்றிய நாடகம் தான். அந்த படங்களை பார்த்தே தெரியும். அந்த நிகழ்வை, மிக வேகமாக, இணையதளத்திலும் பரவ செய்தனர்.'ஐபேக்' ஆட்டுவிக்க, ஸ்டாலின் ஆடுகிறார்!


போகப் போகத் தெரியும்!அரங்க.சேகர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சசிகலா விடுதலையாகி வெளியே வந்தவுடன், அ.தி.மு.க.,வில் சலசலப்பு ஏற்படும் என, எதிர்பார்த்து இருந்தோர், இன்றைய நிலவரப்படி ஏமாந்துள்ளனர். மற்ற எல்லாரையும் விட அதிகம் ஏமாந்தது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தான்.சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பை பார்த்தோர், அரண்டு போயினர். ஜெ., நினைவிடத்திற்கு செல்வாரோ, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு செல்வாரோ என, சசிகலாவின் திட்டம் தெரியாமல், ஆளுங்கட்சி தலைவர்கள் பயந்ததும் உண்மை.ஆனால், அவர்கள் அனைவரும் பயப்படும் அளவுக்கு, இதுவரை ஒன்றுமே நடக்கவில்லை. 'புலி பதுங்குவது, பாயத் தான்' என்பது, சசிகலா விஷயத்தில்
ஏற்புடையது அல்ல. அவர், 'அ.தி.மு.க., பொதுச்செயலர்' தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை விசாரிக்க வேண்டும் என, நீதிமன்றத்தை நாடியுள்ளார்.தமிழகம் வெற்றி நடை போடுகிறதோ, இல்லையோ... எதிர்க்கட்சி, பன்னீர்செல்வம் கோஷ்டி, மத்திய அரசின் நிர்ப்பந்தம், சசிகலா, தினகரன் என, பல்வேறு பிரச்னைகளை கடந்து, இ.பி.எஸ்., நான்கு ஆண்டுகளாக வெற்றி நடைபோடுகிறார் என்பது உண்மை.தேர்தல் தேதியை அறிவித்த உடன், கூட்டணியும் இறுதி செய்யப்பட்டு விடும். அதன்பின், தேர்தல் ஓட்டப்பந்தயம் தான். இதில் சசிகலா, தினகரன் பங்கு என்ன என்பது, போகப்போகத் தான் தெரியும்.அவர்கள் தனித்து விடப்பட்டால், அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியில் பாதிப்பு ஏற்படுமா என்பது தெரியவில்லை. ஜெ., - ஜா., என, அ.தி.மு.க., பிரிந்தபோது, தி.மு.க., எளிதில் வெற்றி பெற்றது. அதே கதை, இப்போது மீண்டும்
நடக்குமோ?


வட்டியே இவ்வளவு என்றால்...என்.வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு, எட்டு ஆண்டுகளில் வாங்கிய பல்வேறு கடன்களுக்கான வட்டி, 1.90 லட்சம் கோடி ரூபாயாம். இதில், 1.66 லட்சம் கோடி ரூபாயை, மாநில அரசு செலுத்தி இருக்கிறதாம்.வட்டி மட்டுமே இவ்வளவு என்றால், கடன் தொகையை கணக்கிட்டால், மயக்கமே வருகிறது.தமிழக அரசின் கடன் விபரத்தை, மத்திய தலைமை நிதித் தணிக்கைக் குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அ.தி.மு.க., ஆட்சியின் கையாலாகாத்தனம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வழியில்லாமல் வட்டி கட்டும் தமிழக அரசு, தேர்தலுக்காக, விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன், 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, தம்பட்டம் வேறு அடித்துக் கொள்கிறது.'ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே' என்று சொல்வது போல் இருக்கிறது, அ.தி.மு.க., தலைவர்களின் தாராள குணம்!ஓய்வூதியம் கொடுக்க இயலாமல், அரசு ஊழியரின் பணி காலத்தை அதிகரிக்கின்றனர். நல்ல சாலை, தரமான குடிநீர், வேலைவாய்ப்பு என, ஏதும் இல்லை.ரேஷன் கடைகளில் இலவசமாக கோதுமை, அரிசி, 2,500 ரூபாய் கொடுத்து, தங்கள் நிர்வாக, 'திறனை' காட்டியுள்ளனர், அ.தி.மு.க.,வினர்.அன்று, ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க கருணாநிதி, பிரதமராக இருந்த இந்திராவிடம் சரணாகதி அடைந்தார். இன்று ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க, அ.தி.மு.க., தலைவர்கள், பிரதமர் மோடியிடம் சரணாகதி அடைந்துள்ளனர்.ஒரு விஷயத்தில், ஜெயலலிதாவை நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவர், எவ்வளவு நெருக்கடியை சந்தித்தபோதும், மத்திய அரசிடம் பணிந்ததே இல்லை.பெட்ரோல், டீசல் விலை, 10 காசு உயர்த்தினாலும், மத்திய அரசுக்கு கடுமையாக கண்டனம் தெரிவிப்பார், ஜெயலலிதா. இன்று, பெட்ரோல் விலை, 100 ரூபாயாகி விட்டது; அ.தி.மு.க.,வில் இருந்து சின்ன சத்தம் கூட எழவில்லை.
இலவசம், கடன் ரத்து போன்ற உதவாக்கரை திட்டங்களால், தமிழகத்தின் கடன் சுமை, ௭ லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஓட்டுக்கு பணம் என, கொஞ்ச பணத்தை மக்களுக்கு துாக்கி வீசிவிட்டு, கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை, திராவிட அரசியல்வாதிகள் பதுக்கியுள்ளனர்.மீண்டும் ஏதேனும் ஒரு திராவிட கட்சியின் பிடியில் தான், தமிழகம் சிக்க போகிறது... தமிழகத்தின் கடன் தொகை, எத்தனை லட்சம் கோடி ரூபாயாக உயர போகிறதோ!


ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஏன்?டாக்டர் ராம்.மோகன்தாஸ், காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., வேட்பாளர், தன் தொகுதிக்கு தேர்தல் செலவுக்காக, 10 கோடி ரூபாய் செலவு செய்ய தயாராக இருக்க வேண்டும். அதில், 5 கோடி ரூபாயை, கட்சியிடம் முன்கூட்டியே கட்டி விட வேண்டுமாம்.
அன்றாடம், அ.தி.மு.க., அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 10 கோடி ரூபாய் செலவு செய்யும், தன் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றால், ஊழல் செய்ய மாட்டார் என, உத்தரவாதம் கொடுப்பாரா?கருணாநிதி முதல்வராக பதவி ஏற்ற பின் தான், தமிழகத்திற்கு ஊழல் என்ற வார்த்தையே அறிமுகமானது. கட்சியின் தலைமை முதல் கவுன்சிலர் வரை, ஊழல் செய்து சொத்து குவித்தனர். அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., ஆட்சியிலும் ஊழல் நடந்தது.ஸ்டாலினால், 'ஊழல் இல்லாத ஆட்சி கொடுப்போம்' என, உறுதி கூற முடியுமா... ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், தேர்தலை சந்திப்பாரா?பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதே, ஊழல் செய்வதற்கு தானே!


அக்கட்சிகளின் சாயம் வெளுக்கும்!பா.பாலசுப்ரமணியன், புதுச்சேரியிலிருந்து எழுது கிறார்: தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தனித்து நிற்க வேண்டும்.நிரந்தர ஓட்டு வங்கி உடைய, இந்த பெரிய கட்சிகள் இரண்டும், தங்கள் வெற்றிக்கான ஓட்டு வித்தியாசத்திற்கு உதவும் என நம்பியே, சிறிய கட்சிகளை எல்லாம் கூட்டணி மூலம் வளர்த்து விட்டன.இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கும் மனப்பான்மை உடைய, இந்த சிறிய கட்சிகளில், 95 சதவீதம் லெட்டர்பேடு கட்சிகளே. இவற்றிற்கு இருக்கும், ஒற்றை இலக்க ஓட்டு சதவீதம், தேர்தலுக்கு தேர்தல் மாறுபடக் கூடியது.
காரணம், இந்தக் கட்சிகளுக்கு ஓட்டுப்போடும் சொற்ப வாக்காளர்கள், அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்ப, தங்கள் விஸ்வாசத்தை மாற்றிக் கொள்வர். இந்த சூட்சுமம் புரிந்து தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 234 தொகுதிகளிலும் தனித்து நின்று சாதித்துக் காட்டினார்.இன்றைய சூழ்நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால், அ.தி.மு.க., தலைமை, ஓரிரு கட்சிகளை மட்டும் கூட்டணியில் இணைத்து, அவற்றிற்கு மொத்தம், 34 தொகுதிகளை மட்டும் ஒதுக்கி, மீதி உள்ள, 200 தொகுதிகளிலும்
போட்டியிட வேண்டும்.தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், இதேபோன்ற நிலைப்பாடு எடுத்தால், எல்லா சிறிய கட்சிகளின் சாயமும், ஒரே நேரத்தில் வெளுத்துவிடும்.


இதைத் தான் கமல் விரும்புகிறாரா?நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'டாஸ்மாக்' நிறுவனத்தை, தனியார் மயமாக்க வேண்டும் என, கமல் கூறியதை கேட்டு, சிரித்தேன். தமிழக அரசின் அமுத சுரபியே, டாஸ்மாக் தான். இரு கழகங்களும், டாஸ்மாக் வருவாயை நம்பியே, ஓட்டு வங்கி அரசியலுக்காக எண்ணற்ற இலவசங்களை அறிவிக்கின்றன; வழங்குகின்றன. உண்மையில், டாஸ்மாக்கை நம்பி தான், தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது.மதுவிலக்கை ரத்து செய்து, தமிழகத்தை தவறான பாதைக்கு அழைத்து சென்றவர், கருணாநிதி. அவருக்கு பின் முதல்வர் பதவியேற்ற எம்.ஜி.ஆரும், மதுவிற்கு எதிரான போக்கை கடைப்பிடிக்கவில்லை. அவர் வழி வந்த ஜெயலலிதா, டாஸ்மாக்கை வலுப்படுத்தினர். மது விற்பனையில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே எந்த பேதமும் இல்லை. டாஸ்மாக், தனியார் வசம் ஒப்படைத்தால், அவர்கள் நன்கு கொழுத்து, அரசியல்வாதிகளுக்கு கமிஷன் கொடுப்பர்; அரசுக்கு கிடைக்கிற வருவாய் சுரண்டப்படும். இதைத் தான், கமல் விரும்புகிறாரா?

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X