ஓராண்டு நிறைவு விழா மூலம் பா.ஜ., தேர்தல் பிரசாரம்!
''சின்னபுள்ள தனமா இருக்கு பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''என்னன்னு விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தி.மு.க., தலைவர் ஸ்டாலினை ரொம்ப கலாய்ச்சது, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான்... அவரை பழி வாங்க, தி.மு.க., ரொம்ப யோசிச்சாங்க பா...
''ராஜேந்திர பாலாஜி, சிவகாசி தொகுதியில நடக்கும் அரசு நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு இருக்கார்... அப்போது, தி.மு.க.,வினர், குசும்புக்கார சிறுவர்களை ஏவி, அமைச்சரை கலாய்க்கிறாங்களாம் பா...
''அதாவது ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சியில கலந்து கொள்ள வரும்போது, அந்த சிறுவர்கள், 'ஸ்டாலின் தான் வர்றாரு... விடியல் தர போகிறாரு...'ன்னு பாடி, தகர டப்பாக்களை தட்டி கலாய்க்கிறாங்களாம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''இதெல்லாம் நன்னாவா இருக்கு...'' என, வருத்தப்பட்ட குப்பண்ணா, ''மூன்று வருஷமா பரிசுத் தொகை கொடுக்கலையாம் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.''யாருக்குங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''ஒவ்வொரு வருஷமும், தேசிய அளவுல போலீசாருக்கு திறனாய்வு போட்டி நடக்கும்... அதுல ஜெயிக்கற தமிழக போலீசாருக்கு, மாநில அரசு சார்புல, பரிசு கொடுப்பா ஓய்...
''தங்கப் பதக்கம் ஜெயிச்சா, ௫ லட்சம் ரூபாய்; வெள்ளிக்கு ௩ லட்சமும்; வெங்கலத்திற்கு ௨ லட்சம் ரூபாயும் கொடுப்பா... 2016க்கு பின், மூன்று வருஷமா, அந்த பரிசுத் தொகை கொடுக்கலையாம் ஓய்...
''இதுவரை, 26 தங்கம், 17 வெள்ளி, ஒன்பது வெண்கல பதக்கங்கள் ஜெயிச்சுருக்கா... மொத்தம், 2.07 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொடுக்கணும்... காவல் துறையை தன் வசம் வைச்சிருக்கற முதல்வர், போலீசாருக்கு பரிசு தொகையை கொடுக்கணும்ன்னு, கோரிக்கை அனுப்பியிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''ஓராண்டு நிறைவு விழாவை, தேர்தல் திருவிழாவாக கொண்டாட போறாவ வே...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''என்ன, ஏதுன்னு விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழக பா.ஜ., தலைவராக முருகன் பதவி ஏத்துக்கிட்டு, வர்ற, 11ம் தேதியோட, ஒரு வருஷம் நிறைவு பெறுதாம் வே...
''இந்த ஓராண்டுல, பிற கட்சி நிர்வாகிகளை, பா.ஜ.,வுல சேர்த்தது... வேல் யாத்திரையை வெற்றிகரமா நடத்தியது... தைப்பூசத் தினத்தன்று, அரசு விடுமுறை வாங்கிக் கொடுத்ததுன்னு, அவரோட சாதனையை எல்லாம், அக்கட்சியினர் விளம்பரப்படுத்த போறாவ வே...
''அது தொடர்பான வீடியோவுல, 'வெற்றி வேல் யாத்திரை; தமிழகத்தில் முருகனின் ஆட்சி'ன்னு கோஷம் எல்லாம் இருக்காம்... கட்சித் தலைவரா பொறுப்பேத்து, ஒரு வருஷம் ஆகுறதெல்லாம் பெரிய விஷயமில்லை... இது வழியா, மக்கள்கிட்ட தேர்தல் பிரசாரம் செஞ்சு, வெற்றி பெறணும்ங்கிறது தான் திட்டமாம் வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
நாயர் கடை ரேடியோவில், 'ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, - காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே...' பாடல் ஒலிக்க, நண்பர்கள் சிரித்தபடியே
நடையைக் கட்டினர்.
கம்ப்யூட்டர் லஞ்சம் கேட்கும் தாலுகா ஆபீஸ் அதிகாரிகள்!
''சிலை அரசியல்ல சிக்கிட்டாங்க...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், அந்தோணிசாமி.
''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தி.மு.க., மகளிர் அணிச் செயலர் கனிமொழி, சமீபத்துல, மதுரையில பிரசாரம் செய்தாங்க... வழக்கம்போல, 'ஐபேக்' தான் இதுக்கான ஏற்பாடுகளை செய்ததுங்க...
''ஆனா, அவங்களுக்கு உள்ளூர் அரசியல் நிலவரம் சரியா தெரியலை... இதனால, முன்னாள் மேயர் முத்து சிலைக்கு மாலையிட்ட கனிமொழி, பக்கத்துல இருந்த மூக்கையா தேவர் சிலையை கண்டுக்கலைங்க...
''அதே மாதிரி, அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர் சிலைகளுக்கு மாலை போட்டவர், மன்னர் திருமலை நாயக்கர், கட்டபொம்மன் சிலைகளை, 'மிஸ்' பண்ணிட்டாங்க... இதனால, உள்ளூர் கட்சியினர், 'எங்களிடம் கேட்டு, நிகழ்ச்சிகளை ஏற்பாடு பண்ணியிருந்தா, இப்படி குளறுபடிகள் நடந்திருக்காது'ன்னு புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அதுவும் சரி தான்... தேர்தல் வேலைகளை கட்சிக்காரங்க தானே செய்யணும்... 'ஐபேக்' காரங்களா வந்து செய்வாங்க...'' என்ற அன்வர்பாயே, ''முதல்வர் ஊர்ல இருக்கற அதிகாரியின் புத்திசாலித்தனத்தை கேளுங்க பா...'' என, அடுத்த விஷயத்திற்கு மாறினார்.
''விளக்கமா சொல்லும் வே...'' என்றார், அண்ணாச்சி.
''சேலம் மாவட்டம், இடைப்பாடி நகராட்சியில பொறியாளரா இருக்கிறவர் முருகன்... மூணு வருஷத்துக்கு மேலா இங்கயே இருக்காரு... கடந்த ஆறு மாதங்களா, நகராட்சி கமிஷனர் பொறுப்பையும் கூடுதலா கவனிச்சிட்டு இருந்தாரு பா...
''சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மூணு வருஷத்துக்கு மேலா, ஒரே இடத்துல இருக்கிறவங்களை மாற்றும்படி, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியிருக்குது... கமிஷனர் பொறுப்புல இருந்தா, இடமாறுதல்ல சிக்கிடுவோம்னு நினைச்ச முருகன், மேலிட செல்வாக்கை பயன்படுத்தி, கமிஷனர் பொறுப்புல இருந்து விலகி, பொறியாளர் பணிக்கு திரும்பிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''கம்ப்யூட்டர் வாங்கி தாங்கோன்னு அடம் பிடிக்கறா ஓய்...'' என, கடைசி மேட்டருக்குள் களம் புகுந்தார், குப்பண்ணா.
''யாரைச் சொல்லுதீரு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''பதிவுத் துறையில புதுசா முத்திரைத்தாள் விற்பனையாளர், 'லைசென்ஸ்' வழங்கறா... இதுக்கு விண்ணப்பத்துடன், செல்வ நிலை சான்றிதழ் இணைக்கணும் ஓய்...
''இந்த சான்றிதழ் வாங்க, பலரும் தாலுகா ஆபீஸ்களுக்கு போறா... அவாளுக்கு, அங்க கிடைக்கற அனுபவம், தலை சுத்த வைக்கறது...
''அங்க இருக்கற அதிகாரிகள், 'இந்த லைசென்சை வாங்கி, பெரிய அளவுல லாபம் சம்பாதிக்க போறேள்... அதனால, எங்களை சிறப்பா கவனிச்சிடுங்கோ'ன்னு கொக்கி போடறா ஓய்...
''திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்துல இருக்கறவா, ஒரு படி மேல போய், 'கம்ப்யூட்டர் வாங்கி தந்தா தான் ஆச்சு'ன்னு கேட்கறா... இதனால, கடுப்பான பலர், 'சான்றிதழே வேணாம் சாமி'ன்னு ஓட்டம் பிடிச்சுட்டா ஓய்...'' என, முடித்தார்
குப்பண்ணா. அரட்டை முடிய, நண்பர்கள் கலைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE