தமிழகத்தின் முதல்வராக, இ.பி.எஸ்., பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரை, உள்ளிருந்தும், புறமிருந்தும் கிளம்பிய சவால்களை சமாளித்து, தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். இப்போதுள்ள சூழ்நிலையில், தேர்தலில் வெற்றியை மையப்படுத்தி, சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
பல இடையூறுகளை எதிர்கொண்டுள்ள போதிலும், ஓரளவிற்கு நிதானத்தோடும், பொறுப்போடும் செயல்பட்டு வருகிறார். டெல்டா வேளாண் மண்டலம், ஸ்டெர்லைட் ஆலை, கொரோனா, காவிரி, முல்லைப் பெரியாறு, குடிமராமத்து, இரு மொழிக் கொள்கை, புயல் நிவாரணம், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு, தொழில், முதலீடுகள், அத்திக்கடவு - அவினாசி திட்டம் போன்ற முதல்வரின் செயல்பாடுகள்,பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன.
மோதல் முற்றியது
அவரது அரசின் இன்னும் பல சாதனைகளை தெரிந்து கொள்ள, பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வெளியாகும் விளம்பரங்களைப் படித்தால் புரியும். தலைவர்களையும், கட்சிகளையும் எடை போடுவதில், தமிழக வாக்காளர்கள் கில்லாடிகள். தலைவர்கள் மற்றும் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளின் நம்பகத்தன்மையை புரிந்து ஓட்டளிப்பவர்கள், கட்சி சார்பில்லா நடுநிலையாளர்கள் மட்டுமே! கடந்த, 1967ல் ஆட்சியைப் பிடித்த, தி.மு.க., ஐந்து முறையும், 1977 முதல், அ.தி.மு.க., ஏழு முறையும் வென்றுள்ளன. அ.தி.மு.க., உதயமான பின், தி.மு.க.,வைக் காட்டிலும், அ.தி.மு.க.,வே மக்களின் மதிப்பீட்டில் முன்னிலை வகிக்கிறது.
நடுநிலையாளர்களும், மகளிரும், அ.தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்வதில் முனைப்பு காட்டுகின்றனர் என்றால் அது மிகையன்று.கடந்த, 1969ல், எம்.ஜி.ஆரின் உதவியால் கருணாநிதி முதல்வரானார். பின், 1971ல் கிடைத்த மகத்தான வெற்றியால், கலைஞர் தடம் மாற ஆரம்பித்தார்.தான் முதல்வராக பெரிதும் உதவிய, எம்.ஜி.ஆருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை. மகன், மு.க.முத்துவை படங்களில், எம்.ஜி.ஆர்., பாணியில் நடிக்க வைத்து, எம்.ஜி.ஆரை ஓரங்கட்ட ஆரம்பித்தார். இதனால், கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு, மோதல் முற்றியது.
விளைவு, 1972ல், 'அக்டோபர் புரட்சி' ஏற்பட்டது. அ.தி.மு.க., உதயமானது... உபயம் கருணாநிதி. தி.மு.க.,வுக்கு மாற்றாக ஒரு கட்சியும், கருணாநிதியை எதிர்க்க ஓர் ஆளுமைமிக்க தலைவரும் கிடைத்த மகிழ்ச்சிப் பெருக்கில் மக்கள், 1977ல், அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தினர்.கடந்த, 1980 லோக்சபா தேர்தல் வரை, எம்.ஜி.ஆர்., நல்லாட்சியை வழங்கினார். லோக்சபா தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தின. லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியின் மமதையில் மிதந்த கருணாநிதி, அ.தி.மு.க., ஆட்சியைக் கலைக்க நிர்ப்பந்தம் செய்ததால், எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது.
அட்டூழியங்கள்
ஆனால், கருணாநிதியின் முதல்வர் ஆசையை நிராசையாக்கி, மீண்டும் ஆட்சிக்கு வந்த, எம்.ஜி.ஆர்., நல்லாட்சி தருவதில் கவனம் செலுத்துவதை விட, கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதையே, முக்கிய குறிக்கோளாக வைத்து, மிக்க கவனத்துடன் செயல்பட்டார். அதை, முனைப்புடன் சாதித்தும் காட்டினார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவால், மாற்று இல்லாததால் மக்கள் மீண்டும், தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க நேரிட்டது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு, தி.மு.க.,வினரால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் அதிகம்.வேண்டாதவர்களை வெறியுடன் தாக்குவதில், தி.மு.க.,வினர் கைதேர்ந்தவர்கள். மதுரையில் இந்திரா மீது நடத்தப்பட்ட தாக்குதலும், பத்திரிகை அலுவலகம் ஒன்றில் ஆடிய வெறியாட்டமும், மறந்தும் மறக்கக்கூடாத குற்றங்கள். அ.தி.மு.க.,வும் அவ்வப்போது அராஜகங்களை நிகழ்த்துவதுண்டு. உதாரணமாக, தர்மபுரி பஸ் எரிப்பு குற்றத்தை கூறலாம்.ஒன்றுபட்ட, அ.தி.மு.க., ஜெயலலிதா தலைமையில், 1991ல் ஆட்சியைப் பிடித்தது. கூடவே, அவரை பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் கூட்டமும் நுழைந்தது.
எவ்வளவு பெரிய ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்தாலும், அவர்களின் அத்துமீறல்களையும், அகம்பாவங்களையும், ஆடம்பர ஆட்டங்களையும் மக்கள் தண்டிக்க என்றுமே தவறியதில்லை. அந்த அளவுகோலை வைத்தே, ஆடம்பர திருமணம் போன்ற அத்துமீறல்களுக்கு தண்டனை வழங்கி, ஜெயலலிதாவை தோற்கடித்தனர். சுதாரித்து மீண்டெழுந்தவர், 2011, 2014, 2016 தேர்தல்களில் வென்றார்; தனித்து நின்றும் வென்று சாதனை புரிந்தார். அவரின் ஆளுமையை, கண்டிப்பை, போராடும் குணத்தை, நடுநிலையாளர்களும், குறிப்பாக மகளிரும் பெரிதும் வரவேற்றனர். ஆளுமை மிக்கவராக, மகளிரை தன் பக்கம் ஈர்த்தார் என்பது மிகையன்று. அ.தி.மு.க., தவறுகளை திருத்திக் கொள்ளும். ஆனால், தி.மு.க.,வோ தவறுகளை சுட்டிக்காட்டினால் பொறுத்துக் கொள்ளாது; பொங்கி எழும்; விளைவுகள் விபரீதமாகும்.
ஜெயலலிதாவின் மறைவு, அ.தி.மு.க.,விற்கு மட்டுமன்றி, தமிழகத்தின் நலம் விரும்பிகளுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஆகிய இரு மகா சக்திகள் இல்லாதிருந்து, கருணாநிதி ஆட்சியே தொடர்ந்திருந்தால், தமிழகத்தின் நிலைமையை எண்ணிப் பார்க்க முடியவில்லை.ஆக, எம்.ஜி.ஆரை வெளியேற்றியமைக்கும், ஜெயலலிதாவை சட்டசபையில் மிகத் தரக்குறைவாக நடத்தியமைக்கும், கருணாநிதியை பாராட்ட, தமிழகம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.
ஏனெனில், கருணாநிதி, எம்.ஜி.ஆரை அனுசரித்துப் போயிருந்தால், அ.தி.மு.க., உருவாகி இருக்காது.ஜெயலலிதாவை, சட்டசபையில், தி.மு.க.,வினர் தரக்குறைவாக நடத்தாமல் இருந்திருந்தால், அவர் மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்க மாட்டார்! ஆளுமை மிக்க தலைவர்களோ, ஆட்சியைப் பிடிக்கின்ற பலமுள்ள வேறு கட்சிகளோ இல்லாத நிலையில், வெற்றிடத்தை நிரப்ப, கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்த ரஜினி, பின்வாங்கியதற்கு முக்கிய காரணம், தான் நினைத்தபடி செயல்பட முடியாத சூழல் உருவாக்கப்படுவதை, பின்னர் உணர்ந்தது தான்.
அடுத்த வாரிசு
தன்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தமிழக மக்களுக்கு சுதந்திரமாக பணியாற்ற இயலாதெனும் சூழ்நிலை ஏற்படும் என்பதை தாமதமாக அறிந்த ரஜினி, அரசியலில் பின்வாங்கினார். இந்த தேர்தலில் ரஜினி வரவில்லை; வாய்ஸ் தரும் வாய்ப்புமில்லை. அவரை, கடவுள் காப்பாற்றி விட்டார். அதுபோல, மூன்றாம் அணிக்கும் வாய்ப்பில்லை. ஆக, களத்தில் இரு திராவிடக் கட்சிகள் மட்டும் தான். அவற்றின் தலைமையில் தான், இரு பெரும் கூட்டணிகள். நடக்கவுள்ள தேர்தலில், தமிழக வாக்காளர்கள், இவ்விரண்டில் ஒன்றை தான் தேர்வு செய்ய வேண்டும்.நான்காண்டுகளில், குறிப்பாக, கடைசி இரண்டாண்டுகளில், முதல்வர் இ.பி.எஸ்., ஆட்சி, 'பரவாயில்லை' என்ற ரகத்திற்கு முன்னேறியுள்ளது. இ.பி.எஸ்.,சை முதல்வர் வேட்பாளராக, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள, ஓ.பி.எஸ்., நாளை எப்படி செயல்படப் போகிறார்; சசிகலாவின் வரவு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்; பா.ஜ., எப்படி காய்களை நகர்த்தப் போகிறது என்பவை, அ.தி.மு.க.,வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். தி.மு.க.,வின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் எல்லாமே, கருணாநிதி குடும்பத்தின் பிடியில் தான்.
இப்போதைக்கு ஸ்டாலினே ஆபத்பாந்தவர். அடுத்த வாரிசு உதயநிதி. இப்பவே, தி.மு.க., வெல்லும் என, சில பத்திரிகைகள் பறை சாற்றுகின்றன; ஊடகங்கள் உசுப்பேற்றுகின்றன. 'சர்வே'க்கள் சகட்டுமேனிக்கு கணிக்கின்றன. காரணம், பெரும்பாலான பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள், தி.மு.க., சார்புடையவை. இ.பி.எஸ்.,சை முதல்வர் என்ற முறையில் மட்டுமே அவை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. தி.மு.க.,வின் வெற்றிக்கான காரணங்களாக, பலமான கூட்டணி, 2019 லோக்சபா தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றி, 10 ஆண்டுகளாக ஆளும், அ.தி.மு.க., ஆட்சி மீதுள்ள அதிருப்தி போன்றவை, அ.தி.மு.க., ஓட்டுகளை பிரிக்கும் எனக்கூறப்படுகிறது. தி.மு.க., பலமான கூட்டணி என்பதை ஏற்றுக் கொண்டாலும் தேர்தல் நெருங்கும் நேரம், சில கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறலாம். 2019 லோக்சபா தேர்தல் வெற்றி, தி.மு.க.,விற்கு கிடைத்ததல்ல. அது, முற்றிலும், பா.ஜ.,வின் எதிர்ப்பு ஓட்டுகளே.
அண்ட விடக்கூடாது
தமிழக மக்கள், பா.ஜ.,வை எதிர்த்ததாலும், பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்ததாலும், வேறு மாற்றின்றி, தி.மு.க.,விற்கு மக்கள் ஓட்டளித்தனர் என்பதே உண்மை. பா.ஜ., மீதுள்ள கடுமையான எதிர்ப்பால், ஓட்டு வித்தியாசங்கள் லட்சங்களில்! அ.தி.மு.க., தவறு செய்யும் போது மட்டுமே, தி.மு.க., வெல்கிறது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வை தண்டித்தவர்கள், சட்டசபை மற்றும் இடைத்தேர்தல்களில், அ.தி.மு.க., ஆட்சியே நீடிக்க ஓட்டளித்தனர்.அ.தி.மு.க.,விடம் நடுநிலை வாக்காளர்கள் மற்றும் தொண்டர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்... முதல்வரும், துணை முதல்வரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்; பா.ஜ.,வுடன் கூட்டணியை தவிர்க்க வேண்டும்; சசிகலாவை முற்றிலும் புறக்கணித்து, அவரைப் பற்றி பேசவே கூடாது என்பதைத் தான். மேலும், பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., ஆகிய கட்சிகள், நிபந்தனைகளின்றி வரும் எனில், கூட்டணியில் சேர்க்கலாம். அ.ம.மு.க.,வை அண்ட விடக்கூடாது. ஜெ., உறுதிமொழியை நிறைவேற்ற, அவரது பிறந்த நாளிலிருந்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தேவைப்பட்டால், தனித்து போட்டியிடவும் தயங்கக் கூடாது!
முனைவர் என்.கிருஷ்ணசாமி
தொடர்புக்கு:
மொபைல்: 90475 70508
இ - மெயில்: nkrishnaswamy44@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE