புதுடில்லி: 'நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தற்சார்பு இந்தியா இலக்கை அடையவும், மத்திய, மாநில அரசுகள் இடையே சிறந்த ஒத்துழைப்பு தேவை' என, பிரதமர், நரேந்திர மோடி கூறியுள்ளார். 'அதற்காக, தனியார் நிறுவனங்களின் பங்களிப்புக்கு அதிக ஊக்கம் அளிக்க வேண்டும்' என, அவர் வலியுறுத்தினார்.
மத்திய அரசுக்கு திட்டங்களை வகுத்து தரும், 'நிடி ஆயோக்' அமைப்பின் ஆறாவது நிர்வாக கவுன்சில் கூட்டம், நேற்று நடந்தது. இந்த கவுன்சிலில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.முதல் முறையாக இந்தக் கூட்டத்தில், லடாக் யூனியன் பிரதேசம் பங்கேற்றது. ஜம்மு - காஷ்மீரும், யூனியன் பிரதேசமாக இதில் பங்கேற்றது.
இந்தக் கூட்டத்தில், பிரதமர், நரேந்திர மோடி பேசியதாவது:கொரோனா வைரஸ் பரவல் காலத்தின்போது, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டதால், அதிக பாதிப்பை தடுத்துள்ளோம். கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியும், மத்திய, மாநில அரசுகள் இடையே சிறந்த ஒத்துழைப்பும் இருந்தால், எந்த இலக்கையும் நாம் அடைய முடியும்.
எண்ண ஓட்டம்
இந்த கூட்டாட்சி தத்துவம் என்பது மாநிலங்களுக்கு இடையே மட்டுமல்ல, மாவட்டங்கள் இடையேயும் இருக்க வேண்டும். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் முன்னேறி செல்வதற்கு தடையாக உள்ள, தற்போதைய சூழ்நிலைக்கு உகந்ததாக இல்லாத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.மத்திய அரசின், 2021 - 2022 நிதியாண்டுக்கான பட்ஜெட், பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளது. நேரத்தை வீணடிக்காமல், மிகவும் வேகமான வளர்ச்சி தேவை என்பதே நாட்டு மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில், தனியார் நிறுவனங்கள், மிகுந்த உத்வேகத்துடன் தங்களுடைய பங்களிப்பை அளிக்க அதிக வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அது, தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு உதவும்.தற்சார்பு இந்தியா என்பது, நம்முடைய தேவைகளை சுயமாக நிறைவேற்றி கொள்வது மட்டுமல்ல. உலக நாடுகளுக்கும் அவர்கள் விரும்பும் தரத்தில் பொருள்களை தருவதுதான்.
அதிகரிக்கும்
விவசாய துறையில் மிகப் பெரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு உள்ளோம். சமையல் எண்ணெய் வித்துக்களை பயிரிட ஊக்கம் தர வேண்டும். தற்போது, ஆண்டுக்கு, 65 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, சமையல் எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். அந்தத் தொகை, நம் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும்.
பல்வேறு துறைகளில், உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளித்து, உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் தருகிறோம். இதன் மூலம் இந்தத் துறைகளில் அதிக முதலீடு கிடைக்கும். இறக்குமதியை குறைக்கும் அதே நேரத்தில், ஏற்றுமதிக்கான வாய்ப்பும் நமக்கு கிடைக்கிறது.இந்த நல்ல வாய்ப்புகளை அனைத்து மாநிலங்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதற்காக தான், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறப்பு பொருட்களின் உற்பத்திக்கு முக்கியத்துவம் தருகிறோம். இது, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தும். அதனால், உற்பத்தி அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
நிர்மலா அழைப்பு
டில்லியில் நேற்று நடந்த, அனைத்திந்திய நிர்வாகவியல் சங்கத்தின் கூட்டத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:முதலீடுகள் குறித்து, பிரபல பொருளாதார நிபுணர், ஜான் மயார்டு கெய்னல், 'அனிமல் ஸ்பிரிட்' எனக் கூறுவார். அதாவது முதலீடுகள் செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.நம் நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களும், மிகுந்த உத்வேகத்துடன், அதிக முதலீடுகளை செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் அதிகம் பங்கேற்க வேண்டும். அதற்காக, கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டு உள்ளது.உலகின் மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சி உடைய நாடாக இந்தியா விளங்குவதற்கு, அதிக அளவில், புதிய முதலீடுகள் தேவை.இவ்வாறு, அவர் பேசினார்.
கோதாவரி - காவிரி இணைப்பு பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
'நிடி ஆயோக்' அமைப்பின் ஆறாவது நிர்வாக கவுன்சில் கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது. இதில், மாநில முதல்வர்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர். தமிழக
முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:தமிழகத்தில், கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. சிறந்த நிர்வாகத்தில், தமிழகம், முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில், 2020 ஏப்., முதல் செப்., வரை பெற்ற, அன்னிய முதலீடுகளில், 16 சதவீதத்தை, தமிழகம் ஈர்த்துள்ளது.ஒற்றை சாளர முறையில், 22 ஆயிரத்து, 332 கோடி ரூபாய் முதலீட்டுக்கு, அனுமதி அளிக்கப்பட்டு, 76 ஆயிரத்து, 835 பேருக்கு, வேலை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 2019 முதல், தமிழகம், 453 முக்கிய தொழில் திட்டங்கள் வாயிலாக, 4.07 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது; 13 லட்சம் பேருக்கு, வேலை கிடைக்க வழி செய்துள்ளது. தமிழகத்தின், புதிய தொழில் கொள்கை, மேலும் தொழிற்சாலைகள் வரவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக ஊக்குவிப்பதாகவும் அமையும். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை, பிரதமர், தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும். இந்த திட்டத்தால், தெலுங்கானா, ஆந்திரா, தமிழக மக்கள் பயன் பெறுவர். இவ்வாறு, முதல்வர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE