புதுடில்லி:நாட்டில், கொரோனா சிகிச்சையில் உள்ள, 1.43 லட்சம் பேரில், 76 சதவீதம் பேர் மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் என, மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம்வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பாதிப்பை கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 7.87 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
புதிய பாதிப்பு
இதன் முடிவில், 13 ஆயிரத்து, 993 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதியானது. இவர்களுடன், கொரோனா பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, ஒன்பது லட்சத்து, 77 ஆயிரத்து, 387 ஆக அதிகரித்துள்ளது.கடந்த, 22 நாட்களுக்குப் பின், நாட்டின் ஒரு நாள் வைரஸ் பாதிப்பு, 14 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. மஹாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில், புதிய பாதிப்புகள் வேகமாக அதிகரிக்கின்றன.
கடந்த, 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவில் மட்டும், 6,112 பேரிடம் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு உள்ளானோரில், 1.43 லட்சம் பேர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இவர்களில், 76 சதவீதம் பேர் மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள்.மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகளால், கொரோனா பாதிப்பில் இருந்து, ஒரு கோடியே, ஆறு லட்சத்து, 78 ஆயிரத்து, 048 பேர் குணமடைந்து உள்ளனர்; மீட்பு விகிதம், 97.27 சதவீதமாக இருக்கிறது.
கொரோனா தொற்றால் கடந்த, 24 மணி நேரத்தில், மஹாராஷ்டிராவில், 44 பேர், கேரளாவில், 15 பேர் உட்பட, 101 பேர் உயிர்இழந்துள்ளனர். தெலுங்கானா, ஹரியானா, ஜார்க்கண்ட், சிக்கிம், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட, 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஒரு இறப்பும் பதிவாகவில்லை.
அறிக்கை
வைரஸ் பாதிப்பால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 56 ஆயிரத்து, 451 ஆக உயர்ந்துள்ளது; இறப்பு விகிதம், 1.42 சதவீதமாக இருக்கிறது.பலி எண்ணிக்கையில், 51 ஆயிரத்து, 719 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.தமிழகம், 12 ஆயிரத்து, 451 பேருடன் அடுத்த இடத்திலும், கர்நாடகம், 12 ஆயிரத்து, 287 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE