புதுடில்லி:எல்லையில் இருந்து படைகளை முழுமையாக விலக்கி கொள்வது குறித்து, இந்தியா - சீனா ராணுவ படைத் தளபதிகள் நிலையிலான, 10வது சுற்று பேச்சு நேற்று நடந்தது.சீன ராணுவம், கிழக்கு லடாக்கின் சில பகுதிகளுக்குள், அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து, நம் படைகளும் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
நடவடிக்கை
கடந்தாண்டு மே மாதத்தில் துவங்கிய இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, இரு ராணுவத்தின் எல்லை படைப் பிரிவின் தளபதிகள் இடையே, ஒன்பது சுற்று பேச்சு நடந்தது. இதையடுத்து, பாங்காங் சோ ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை, கடந்த, 10ம் தேதி துவங்கியது. படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப் பட்டு உள்ளதாக, இரு நாட்டு ராணுவமும் அறிவித்தன.
இந்நிலையில், எல்லையில் மற்ற இடங்களில் உள்ள படைகளையும் திரும்பப் பெறுவது குறித்த, 10வது சுற்று பேச்சு நேற்று நடந்தது.எல்லையை ஒட்டியுள்ள சீனாவின் மோல்டோவில், இந்த பேச்சு நடந்தது.
விவாதம்
லேயை தலைமையிடமாக வைத்து செயல்படும், 14வது படைப் பிரிவின் தளபதி, லெப்டினென்ட் ஜெனரல், பி.ஜி.கே.மேனன் தலைமையில், இந்தியக் குழு பங்கேற்றது. சீன தரப்பில், தெற்கு ஜின்ஜியாங் மாவட்டத்தின் தளபதி, மேஜர் ஜெனரல், லியூ லின் பங்கேற்றார்.ஹாட் ஸ்பிரிங், கோக்ரா, தேப்சாங் உள்ளிட்ட பகுதி களில் இருந்தும் படைகளை விலக்கி கொள்வது குறித்து பேச்சில் விவாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE