கோல்கட்டா : மேற்கு வங்க சட்டசபை தேர்தலையொட்டி, 'மண்ணின் மகளை ஆதரிப்பீர்' என்ற புதிய கோஷத்தை திரிணமுல் காங்., வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, திரிணமுல், பா.ஜ., காங்., உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று திரிணமுல் காங்., தலைமை அலுவலகத்தில், 'மேற்கு வங்கம், சொந்த மகளே முதல்வராக தொடர விரும்புகிறது; மண்ணின் மகளை ஆதரிப்பீர்' என்ற புதிய கோஷம் அறிமுகப்படுத்தப்பட்டது. மம்தா படத்துடன் கூடிய இந்த விளம்பர பதாகைகள், கோல்கட்டா நகர் முழுதும் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, திரிணமுல் காங்., பொதுச் செயலர், பார்த்தா சட்டர்ஜி கூறியதாவது:மேற்கு வங்க மக்கள் தங்கள் மகளான, மம்தாவே முதல்வராக நீடிக்க விரும்புகிறார்கள். அதைக் குறிக்கும் வகையில், இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
பா.ஜ., தலைவர்களை, வெளிமாநிலத்தவர்கள் என, மம்தா தொடர்ந்து தன் பிரசாரத்தில் குறிப்பிட்டு வருகிறார். இக்கருத்து மக்கள் மனதில் அழுந்தப் பதிவதற்காகவே, புதிய விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மம்தா, 2011 சட்டசபை தேர்தலில் 'பழிக்கு பழி வேண்டாம்; மாற்றம் தான் வேண்டும்' என்ற விளம்பர வாசகத்தின் மூலம், 34 ஆண்டு கால கம்யூ., ஆட்சியை அகற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE