கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், காரில் போதைப் பொருள் வைத்திருந்த, பா.ஜ., இளைஞர் அணி பொதுச் செயலர் பமீலா கோஸ்வாமியை, போலீசார் கைது செய்துள்ளனர். இதில், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் சதி செய்திருப்பதாக, பமீலா குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோதனை
மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் கோல்கட்டாவில், நேற்று முன்தினம் மாலை, பா.ஜ., இளைஞர் அணியின் பொதுச் செயலர் பமீலா கோஸ்வாமி, காரில் சென்றார். அவருடன், இளைஞர் அணி உறுப்பினர் பிரபிர் குமார் தே என்பவரும் இருந்தார்.அப்போது, அவரின் காரை மறித்து, போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில், காரின் இருக்கைக்கு அடியில் இருந்தும், பமீலாவின் பணப் பையில் இருந்தும், 'கோகெய்ன்' என்ற போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டது. 100 கிராம் அளவுக்கு இருந்த, அந்த போதைப் பொருளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, காரில் இருந்த, பமீலா, பிரமிர் குமார் மற்றும் பமீலாவின் பாதுகாவலரை போலீசார் கைது செய்தனர்.
கைதான பமீலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்த விவகாரத்தில், சி.ஐ.டி., விசாரணை வேண்டும். இதில், பா.ஜ., தேசிய பொது செயலர் கைலாஷ் விஜய்வார்கியாவின் கூட்டாளியான ராகேஷ் சிங், சதி செய்துள்ளார். அவரை கைது செய்யவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். இந்நிலையில், ராகேஷ் சிங் கூறியதாவது:எனக்கு எதிராக, திரிணமுல் காங்., அரசு சதி செய்கிறது. பமீலாவை மூளை சலவை செய்துள்ளனர். நான் அவரைச் சந்தித்து, ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிறது. நான், எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
திரிணமுல் காங்., மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான சந்திரிமா பட்டாச்சார்யா கூறியதாவது:
சந்தேகம்
மேற்கு வங்கத்தில், இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதை பார்த்து, வெட்கப்படுகிறேன். மாநிலத்தில், பா.ஜ.,வின் உண்மையான முகம் வெளிப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், குழந்தை கடத்தல் வழக்கு ஒன்றில், பா.ஜ., தலைவர்கள் சிக்கினர்; இப்போது, போதைப் பொருள் வழக்கு.இவ்வாறு, அவர் கூறினார்.
போலீசாருக்கு, பமீலா மீது ஏற்கனவே சந்தேகம் இருந்ததாகவும், அதன் அடிப்படையில், காரில் நடத்தப்பட்ட சோதனையில், போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE