புதுடில்லி:டில்லி உயர் நீதிமன்றத்தில், மார்ச், 15 முதல், அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை நேரடியாக விசாரிக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க, 2020, மார்ச், 25 முதல், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய வழக்கு விசாரணைகள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற்றன. பின், 2020, செப்.,1 முதல், ஐந்து அமர்வுகளில், நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு வந்து வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அதன் பின், டில்லியில் கொரோனா பரவல் அதிகரித்ததால், அமர்வுகளின் எண்ணிக்கை மூன்றாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தாண்டு, கொரோனா பாதிப்பு குறைந்ததால், ஜன.,18 முதல், டில்லி உயர் நீதிமன்றத்தில், சுழற்சி முறைப்படி, 11 அமர்வுகளில், நீதிபதிகள் வழக்குகளை நேரடியாக விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்ற பதிவாளர், மனோஜ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பரவல் குறைந்துள்ளதால், மார்ச்,15 முதல், டில்லி உயர் நீதிமன்றம் முழுமையாக இயங்கும். அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை நேரடியாக விசாரிக்க வேண்டும். தற்போதைய, 11 அமர்வுகளின் நேரடி விசாரணை, மார்ச், 12 வரை தொடரும். உயர் நீதிமன்றம் அனுமதிக்கும்பட்சத்தில், விதிவிலக்காக சில வழக்குகளில், வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் ஆகியோர் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராகலாம்.நீதிமன்ற வளாகத்திற்குள் அனைவரும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE