கோடை காலம் துவங்கவில்லை என்றாலும் துவங்கும் முன்பே வீட்டுக்குள் வரும் வெப்பத்தை விரட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ளலாம்.
கோடை காலம் மட்டுமல்ல எப்போதும் வீடு குளிர்ச்சியாக இருக்க சில இயற்கை முறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.பொதுவாக வீட்டு சமையல் அறைகளில் உலவும் வெப்பத்தை வெளியேற்ற எக்சாஸ்ட் பேன் பொருத்தி வைப்பார்கள். இதே போல் வீட்டில் வெப்பம் அதிகம் உலவும் பிற அறைகளிலும் பொருத்தினால் வீடு குளிர்ச்சியாக இருக்கும். கடும் வெயில் நேரம் ஒரு கிண்ணம் நிறைய ஐஸ் கட்டிகளை நிரப்பி அதை டேபிள் பேன் முன் வைத்து விடுங்கள். சிறிது நேரத்தில் பேன் காற்று ஐஸ் கட்டியில் மோதி வீட்டை ஏ.சி., போட்டது போல் ஜில்லென மாற்றி விடும்.
ஜன்னலை திறந்து வெளியே சாக்கு பையில் ஐஸ் கட்டிகளை சுற்றி வைத்து, ஜன்னலின் உள்புறம் டேபிள் போன் சுற்ற விட்டாலும் ஜில்லென்று இருக்கும். பகல் நேரம் வெளிக்காற்று உள்ளே வரும் அளவிற்கு கதவு, ஜன்னல்களை திறந்து வைக்கலாம். வீட்டுக்குள் செடிகள் வளர்க்கலாம் வீட்டில் இருக்கும் தேவையில்லாத, பயன்படுத்தாத மரச் சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை உடனே அகற்றி விடுங்கள். வீட்டிற்குள் காற்று வந்து போக விசாலமான இடம் தேவை என்பதால் இதை நாம் செய்ய வேண்டும்.
வீட்டிற்குள் பிற பொருட்களை வைத்தது போக போதுமான அளவு இடம் இருந்தால் வீட்டிற்குள் வளர்க்கும் செடிகளை வைக்கலாம். இது கண்களுக்கு குளிர்ச்சி தருவதோடு, வீட்டை குளிர்ச்சியாக்கும். வீட்டில் ஆங்காங்கே பவுல்களில் தண்ணீர் நிரப்பி, கூழாங்கற்கள் போட்டு வைத்தாலும் குளிர்ச்சியாகும். கதவு, ஜன்னல்களுக்கு பருத்தி துணியாலான திரைச்சீலைகளை பயன்படுத்த வேண்டும். சிந்தடிக் துணிகள் வெப்பம் கிளப்பும். நாம் படுக்கும் தலையணை உறைகளில் அரிசி நிரப்பி தலைக்கு வைத்து துாங்கினால் குளிர்ச்சி கிடைக்கும்.
வீட்டில் வெளிச்சம் தேவையில்லாத போது மின் விளக்குகளை எரியவிட வேண்டாம். கம்ப்யூட்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள் தேவையின்றி ஓடினால் ஆப் செய்து விடுங்கள். இதனால் மின் சாதனங்கள் மூலம் வரும் வெப்பம் குறையும். அடிக்கடி நீர் அருந்துவதால் உடல் வெப்பம் குறைந்து நீர் சத்து தக்க வைக்கப்படும். இதனால் வெயிலின் எரிச்சல் நம்மை தாக்காது. தர்பூசணி, கிர்ணி, முலாம், வெள்ளரி போன்ற நீர் சத்துள்ள பழங்கள் தினமும் சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும்.மொட்டை மாடியில் தண்ணீர் தெளித்து, தென்னை ஓலைகளை பரப்பி வைத்தால் வீட்டிற்குள் வெப்பம் இறங்காது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE