புதுடில்லி:'டூல்கிட்' வழக்கில் ஜாமின் கோரி, திஷா ரவி தாக்கல் செய்த மனுவை, நேற்று விசாரித்த டில்லி நீதிமன்றம், தீர்ப்பை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் வெளியிட்ட, டூல்கிட் எனப்படும், போராட்டம் தொடர்பான தகவல் தொகுப்பு, சர்ச்சையை ஏற்படுத்தியது.
நம் நாட்டில் வன்முறையை துாண்டும் வகையிலான அந்த டூல்கிட்டை, காலிஸ்தான் அமைப்பு உதவியுடன் உருவாக்கியதாக கூறி, சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, 21, கைது செய்யப் பட்டார். இதையடுத்து, டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஜாமின் கோரி, திஷா முறையிட்டார். அந்த மனு, நீதிபதி தர்மேந்தர் ராணா முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.
அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:இது சாதாரண டூல்கிட் அல்ல. உலக அளவில், இந்தியாவின் நற்பெயரை கெடுக்க உருவாக்கப்பட்ட திட்டம். விவசாயிகள் போராட்டத்தை வைத்து, நம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த, திஷா ரவி செய்த சதி ஆகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதையடுத்து, திஷாவின் வழக்கறிஞர் கூறியதாவது:விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு, டில்லி போலீசார் அனுமதித்தனர். அப்படி இருக்க, திஷா ரவி, அவர்களை ஒன்றுசேர்த்து வன்முறையில் ஈடுபட வைத்ததாக கூறுவது எந்த வகையில் நியாயம்? அவர் எந்த வகையில் தேச துரோகம் இழைத்தார்?
இந்த டூல்கிட்டை பார்த்து, வன்முறையில் ஈடுபட்டதாக யாரும் கூறவில்லை. அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. விவசாயிகள் போராட்டத்தை, உலக அளவில் காட்சிப்படுத்தியது தேச துரோகம் என்றால், திஷா ரவி, சிறையிலேயே இருக்கட்டும்.இவ்வாறு, அவர் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை, நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE