சென்னை:மின் கம்பம், 'கேபிள்' வாயிலாக, மின் வினியோகம் செய்யும் பகுதிகளில், அதற்கென நிர்ணயம் செய்துள்ள, வளர்ச்சி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக மின் வாரியம், சென்னையில் சில இடங்களில், தரைக்கு அடியில், கேபிள்; மற்ற பகுதிகளில், மின் கம்பம் வாயிலாக, மின் வினியோகம் செய்கிறது. புதிய மின் இணைப்பு வழங்கும் போது, ஒருமுறை செலுத்த கூடிய, மீட்டர் வைப்பு தொகை, வளர்ச்சி கட்டணம் உள்ளடக்கிய, பல்வகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மின் கம்பம் உள்ள பகுதிகளில், தாழ்வழுத்த பிரிவுக்கான வளர்ச்சி கட்டணம், ஒரு முனை இணைப்பிற்கு, 1,400 ரூபாயாகவும்; மும்முனை இணைப்பிற்கு, கிலோ வாட்டிற்கு, 1,000 ரூபாயாகவும் உள்ளது. உயரழுத்த பிரிவுக்கு, கிலோ வாட்டிற்கு, 1,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
கேபிள் உள்ள பகுதிகளில், தாழ்வழுத்த பிரிவு வளர்ச்சி கட்டணம், ஒரு முனை இணைப்பிற்கு, 5,000 ரூபாயாகவும்; மும்முனை இணைப்பிற்கு, கிலோ வாட்டிற்கு, 2,500 ரூபாயாகவும் உள்ளது. உயரழுத்த பிரிவுக்கு, கிலோ வாட்டிற்கு, 4,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.சென்னை புறநகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், மின் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த இடங்களில், மின் இணைப்பு வழங்கும்போது, கம்பத்தில் மின்சாரம் எடுத்து சென்றாலும், கம்பத்தில் இருந்து, வீடு வரை, கேபிளில் மின் வினியோகம் செய்யப்படுகிறது.
அந்த இடங்களில், கேபிள் பகுதிகளில் உள்ள வளர்ச்சி கட்டணம் வசூலிக்கப்படுவதால், நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.இதையடுத்து, மின் கம்பம் மற்றும் கேபிள் வாயிலாக, மின் வினியோகம் செய்யும் பகுதிகளில், அதற்கென நிர்ணயித்துள்ள, வளர்ச்சி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என, மேற்பார்வை பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மின் கம்பம் உள்ள பகுதிகளில், கேபிளுக்கான வளர்ச்சி கட்டணம் வசூலித்து இருந்தால், அதை, நுகர்வோரிடம் திருப்பி தருமாறும் தெரிவித்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE