சென்னை:கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அரசாணை, ஓரிரு தினங்களில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது.
வன்னியர் சமுதாயத்தினர், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், தனி இட ஒதுக்கீடு கேட்டு, 1987 செப்., 17 முதல், 23 வரை, சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை ஒடுக்க, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 21 பேர் இறந்தனர்.அந்த போராட்டத்தின்தொடர்ச்சியாக, தி.மு.க., ஆட்சியில், எம்.பி.சி.,என்ற, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ், வன்னியர்கள் உள்ளிட்ட, 108 ஜாதிகளுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இதில் போதிய பலன் கிடைக்காததால், வன்னியர்களுக்கு, 15 சதவீத, தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, சி.என்.ராமமூர்த்தி, 2010ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு, உள் இட ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக, உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன் அடிப்படையில், அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், செயல்படுத்தப்படவில்லை.
மீண்டும் ராமமூர்த்தி, நீதிமன்றம் செல்ல, 2015ல், சென்னை உயர் நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பித்தது.பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வன்னியர்களுக்கு, தனியாக, 10.5 சதவீத, உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. அதன் மீதும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதை நிறைவேற்றக்கோரி, வன்னியர் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு வன்னியர் அமைப்புகள், அரசை வலியுறுத்தி வந்தன.
இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தலை ஒட்டி, 'வன்னியர்களுக்கு, 20 சதவீத, தனி ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே கூட்டணி' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அ.தி.மு.க.,விற்கு நிபந்தனை விதித்தார். அதன்பின், தன் கோரிக்கையை, உள் ஒதுக்கீடு என, தளர்த்தி கொண்டார். இது தொடர்பாக, ராமதாசை சந்தித்து, அமைச்சர்கள் பேச்சு நடத்தினர். அப்போது, 'இட ஒதுக்கீடு கேட்டு, போராட்டங்கள் நடத்திவிட்டோம். அதை அறிவித்தால் தான், தேர்தலை சந்திக்க முடியும்' என, ராமதாஸ் கூறிவிட்டார்.
அதைத் தொடர்ந்து, வன்னியர் சமுதாயத்திற்கு, உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஓரிரு தினங்களில், இது தொடர்பான அறிவிப்பு வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE