சென்னை :''பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, மத்திய - மாநில அரசுகள் பேசினால் தீர்வு கிடைக்கும். தனிப்பட்ட முறையில், இது தொடர்பாக பதிலளிக்க, எனக்கே தர்மசங்கடமாக தான் இருக்கிறது. இந்திய பிரஜையாக, அவற்றின் விலை குறைய வேண்டும் என்பது என் விருப்பமும் கூட,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிப்படையாக பேசினார்.
'சென்னை சிட்டிசன்ஸ் போரம்' அமைப்பின் சார்பில், மத்திய பட்ஜெட் குறித்த கருத்தரங்கம், சென்னை, தி.நகரில் நேற்று நடந்தது. 'தினமலர்' நாளிதழ் மற்றும் சென்னை சிட்டிசன்ஸ் போரம் சார்பில், முதல் முறை வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட, வினாடி - வினா இறுதி போட்டியில், வெற்றி பெற்ற மூவருக்கு, நிர்மலா சீதாராமன், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கினார்.
பின், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:அனைத்து தரப்பினரின் தேவையையும் நிறைவேற்றும் வகையில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் தேவையை விட்டு விடக்கூடாது என்பதில், கவனம் செலுத்தப்பட்டது.
வழி வகைகள்
இந்தியாவின் வளர்ச்சிக்கு, அரசு மட்டுமின்றி, தனியார் துறையின் பங்களிப்பும் அவசியம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பது, தனிப்பட்ட முறையில் எனக்கே தர்மசங்கடமாக உள்ளது. இந்திய பிரஜையாக, அவற்றின் விலை குறைய வேண்டும் என்பதே என் விருப்பம்.பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தில், மத்திய அரசுக்கு மட்டும் பங்கு இல்லை; மாநில அரசுகளுக்கும் பங்கு உண்டு. ஏனெனில், இரு அரசுகளுக்கும் வருவாய் தேவைப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் தான், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.
நடவடிக்கை
அவற்றின் விலை உயர்வுக்கு, மத்திய அரசு காரணம் இல்லை. பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது தொடர்பாக, மத்திய - மாநில அரசுகள் இணைந்து ஆலோசிக்க வேண்டும். மத்திய அமைச்சராக, தனிப்பட்ட முறையில் நான் மட்டும், விலையை குறைக்க முடிவு எடுக்க முடியாது. ஜி.எஸ்.டி., வரம்பிற்குள், பெட்ரோல், டீசலை எடுத்து வருவதற்கு வழி வகைகள் உள்ளன. அதற்கு, மத்திய - மாநில அரசுகள் விரிவாக விவாதம் செய்து, நடவடிக்கை எடுக்கலாம். ஜி.எஸ்.டி.,யில், அதிக வரி விதிப்பு முறைகள் உள்ளன. அதை அமல்படுத்தியதில் இருந்து, வரி விகிதங்களில், ஐந்து முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல பொருட்களின் விலையில், மாற்றம் ஏற்பட்டுஉள்ளது.
ஆலோசனை
இதனால், ஜி.எஸ்.டி., அமல்படுத்தியும், வருவாய் ஈட்ட முடிவதில்லை. ஜி.எஸ்.டி., வரி விதிப்பை முறைப்படுத்த வேண்டும். அதில், மாற்றம் செய்வதைத் தவிர்க்க, ஜி.எஸ்.டி., கவுன்சில் தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.பெண் தொழில் முனைவோரும், ஆண் தொழில் முனைவோரும் சமம். அவர்களுக்கு, தனித்தனியாக ஆலோசனை வழங்கக் கூடாது. ஏனெனில், பெண் தொழில் முனைவோருக்கு தனியாக ஆலோசனை வழங்கினால், அவர்களை குறைத்து மதிப்பிடுவதாக கருதப்படும்.தொழில் முனைவோர், மத்திய - மாநில அரசுகள் அளிக்கும் திட்டங்கள், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, முன்னோக்கி செல்ல வேண்டும். ஒவ்வொரு நபரிடமும், தனித் திறன்கள் உள்ளன. அவற்றை வெளிப்படுத்தி முன்னேற வேண்டும். இவ்வாறு நிர்மலா பேசினார்.
அரசு நிறுவனங்களுக்கு உத்தரவு
சென்னை, தரமணியைச் சேர்ந்த, அர்ஜுன் நடராஜன் என்ற இளைஞர், ''நான், வாகன நிறுத்துமிடம் கண்டறிதல், பணம் செலுத்தும் முறையை, 'டிஜிட்டல்' முறையில் மேற்கொள்வது தொடர்பாக, 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை நடத்துகிறேன். 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிக்கான டெண்டரில் பங்கேற்கும் போது, விற்றுமுதல் அனுபவம் இல்லாததால், என் நிறுவனம் நிராகரிக்கப்படுகிறது,'' என, அமைச்சர் நிர்மலாவிடம் கூறினார்.
அதற்கு, அமைச்சர், ''புதிய தொழில் முனைவோருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், 200 கோடி ரூபாய் வரையிலான, டெண்டரில் பங்கேற்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 'டேர்ன்ஓவர்' அனுபவம் கேட்க வேண்டியதில்லை என, அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; இது போன்று வாய்ப்பு மறுக்கப்பட்டால், என் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்,'' என, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE